பக்கம் எண் :

சொற்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 221

  அரவணைச் சுருட்டோ டாங்கவர் தொடர்ந்து 180
  பரிவுடன் ஓடப் பண்ணிய தெம்மொழி?
அம்மொழி நம்மொழி அத்துணைப் பெருமையும்
செம்மையின் எமக்கெலாம் செப்பியோர் நீவிர்
இன்றிவை மறந்தீர்! எதிர்ப்புரை கிளந்தீர்
 
  கன்றிய மனத்தாற் கரவுரை புகன்றீர் 185
  மந்திர வலிமை செந்தமிழ்க் கிலையெனில்
இந்தநல் லருஞ்செயல் எவ்வணம் இயலும்?
 
 

கடவுளர் விரும்பும் மொழி

     
  கடகரி உரியன் கடும்புலி யதளன்
சடையினை மறைத்து மணிமுடி தரித்து
 
  விடைக்கொடி விடுத்துக் கயற்கொடி எடுத்து 190
  விடவர வொழித்து வேம்பலர் முடித்துத்
தொடுகழல் மாறன் வடிவொடு வந்ததூஉம்,
மடவரல் மனையாள் மலைமகள் உமையாள்
தடாதகைப் பெயரினைத் தாங்கி வந்ததூஉம்,
 
  மயில்மே லமர்வோன் அயில்வே லுடையோன் 195
  எழில்சூழ் மதுரை எழில்நக ரதனுள்
உக்கிர குமர னுருவொடு வந்ததூஉம்,
தெக்கண மொழியாம் தீந்தமிழ்ச் சுவையைக்
கூட்டுண வெழுந்த வேட்கையால் என்றே
 
  பாட்டினில் குருபரர் பாடி வைத்தனர்; 200
  வடக்கினில் நின்றோன் வரன்முறை யாகக்
கடுக்கவின் கண்டன் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுதல் ஏனெனின்
 

---------------------------------------------------------------

  சுருட்டு - (படுக்கைச்) சுருள், கரவுரை - வஞ்சனை மொழி, கடகரி - மதயானை; உரியன், அதளன் - தோலாடையன், விடைக்கொடி - எருதுக்கொடி, வேம்பலர் - வேப்பம்பூ, மாறன் - பாண்டியன், மடவரல் - இளமைமிகும், குருபரர் - குமரகுருபரர், கடுக்கவின் - நஞ்சின் அழகு, கண்டன் - கழுத்தினன்.