பக்கம் எண் :

பக்கம் :222பூங்கொடி

  தொடுக்கும் பழந்தமிழ்ச் சுவையினை மாந்தவே,  
  அறைந்தனர் இவ்வணம் அருட்பரஞ் சோதி; 205
  கண்ணுதற் கடவுள் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்து பசுந்தமிழ் ஆய்ந்தனன்;
வாத வூரன் ஓதிய வாசகம்
தீதுறா வண்ணம் தென்னா டுடைவன்
 
  ஏட்டில் எழுதி நாட்டிற் களித்தனன்; 210
  அர்ச்சனை பாட்டே ஆதலின் நம்மைச்
சொற்றமிழ் பாடெனச் சுந்தரன் றன்பால்
பற்றுடன் சென்று பைந்தமிழ் வேண்டினன்;
வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென்
 
  றெழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம்; 215
  முன்னோர் சொன்ன முடிபினைக் கொள்க!
பின்னோர் நம்மைப் பேணுதல் வேண்டும்`
சொற்போர் இவ்வணம் பற்பல நிகழ்த்திக்
கற்போர் மற்றோர் களிப்பாற் போற்ற
 
  மாந்தர் மனத்தில் மதியொளி ஏற்றினள்; 220
 

ஆள்வோர்க்கு அறிவுரை

     
  ஏந்தும் புகழ்சூழ் இளங்கொடி துணிவுடன்
அரசியல் ஆயத்து முறைபுரி வோர்க்கும்
குறையெலாம் உரைத்தனள் உரிமையும் வேண்டினள்
`துறைதொறும் துறைதொறும் தூயநற் றமிழே
 
  ஆட்சி புரியும் மாட்சிமை வேண்டும் 225
  ஆட்சியின் பெயரால் அயன்மொழி புகுதலைச்
சான்றோர் வெறுப்பர் தமிழகம் மறுக்கும்
ஆன்றமைந் தடங்கிய அறவோர் கொதிப்பர்
ஆதலின் அரசியல் ஆயத் துள்ளீர்
 
  மேதகு பெரியீர் ஆவன புரிக' 230
  என்று பலகால் எடுத்தெடுத் திசைத்தும்  
  நன்று புரிந்திட நயந்திலர் அவரே. 232

---------------------------------------------------------------

  பரஞ்சோதி - திருவிளையாடற் புராண ஆசிரியர், கழகம் - தமிழ்ச்சங்கம், வாதவூரன் - மாணிக்கவாசகர்.