பக்கம் எண் :

விடுதலைக் காதைபக்கம் : 239

 

துவண்டனள் பூங்கொடி

 
     
  ஒருத்தியின் நல்லுடல் உருக்குலைந் திருந்தது;
சிரித்தசெவ் வாயிதழ் விளர்த்துக் கிடந்தது;
செந்தமிழ் பேசிச் சிவந்தஅவ் வாய்தான்
அந்தம் இழந்து நொந்து கிடந்தது;
 
  குழலோ யாழோ குரலோ என்னும் 80
  அழகிய இசைதரும் மிடறெழில் சிதைந்தது;
குழலின் காடு குலைந்து பறந்தது;
பிறையினைப் பழித்துப் பேசிய நுதலெழில்
குறைந்ததோ மறைந்ததோ கூறுவ தறிகிலேம்;
 
  குவளைக் கண்கள் கூர்மை யிழந்தன; 85
  தவழும் அருளொளி இருளில் தணிந்தது;
படர்ந்த பூங்கொடி பரிதியின் கொடுமை
தொடர்ந்து தாக்குறத் துவண்டது போல
மடந்தை உடலம் நுடங்கிக் கிடந்தது;
 
 

ஆள்வோர் ஆணை

     
  மருத்துவர் பலப்பல மருந்துகள் தந்தனர்; 90
  நெருப்பெனச் சுடுநோய் நெகிழ்ந்திட வில்லை;
ஒருநாள் இருநாள் ஓடி மறைந்தன;
மறுநாள் வெப்பம் சிறிதே தணிந்தது;
தணிந்து தணிந்து தண்ண்ணெனக் குளிர்ந்தது;
 
  முனிந்து சிறையுள் மூடிய அரசு 95
  கனிந்துளம் நெகிழ்ந்து கடுநோ யுற்ற
பூங்கொடி தன்னைப் பூட்டிய சிறையகம்
வாங்குக என்னை வழங்கிய தாணை;
 
     
 

தமிழணங்கின் தோற்றம்

 
     
  அவ்விடை எவரோ ஆயிழை தன்பாற்  
  செவ்விதிற் சிலசொல் செப்புதல் போலச் 100
  செவியிற் படலால் செந்தமிழ்ச் செல்வி
குவியிமை திறந்து கூர்ந்து நோக்கினள்;
காலிற் சிலம்பும் கையில் வளையும்
நூலிற் சிறிய நுண்ணிடை தன்னில்
 

---------------------------------------------------------------

  அந்தம் - அழகு, மிடறு - கழுத்து.