| தாமரைக்கண்ணி தெளிவுபடுத்துதல் | |
| | |
| `பேயென ஒருபொருள் உண்டெனப் பேசுதல் ஆயிழை! பேதமை ஆகும் அறிகதில்! மனவலி மிக்கார் மருளார்; இருளில் மனவலி குறைந்தார் மருளுவர்; ஆதலின் கட்படு பொருளெலாம் கருநிறப் பேயாய் | 45 |
| முற்படும், வாய்சொல் மொழிதடு மாறும், செயலறச் செய்யும், வியர்வுறும், நடுக்குறும், மயலுறக் கண்ணொளி மங்கிட இருளும், அச்சம் நெஞ்சில் அறையும், அதுதான் பேயென உலகம் பேசும்; உரமுளார் | 50 |
| ஆயும் அறிவுளார் அஞ்சார் ஆதலின் இவ்வழி நீவிர் ஏகுதிர்! ஏகின் செவ்விய நெஞ்சுரம் சேரும் நுமக்' கெனக் | 55 |
| | |
| முத்தக்கூத்தன் கல்லறை | |
| | |
| `கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம் சேருவ தெங்ஙனம்? செப்புதி' எனலும், | |
| `கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்! மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன் பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும், அதனைக் காணின் அச்சம் தொலையும், மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்க | 60 |
| நெஞ்சுரம் ஏறும்; நிமிர்ந்து நடப்பீர்! வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்கு நஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்; | 65 |
--------------------------------------------------------------- |
| ஆயிழை - அல்லி, கட்படு - கண்ணில் தோன்றும், அறையும் - அடிக்கும், ஏகுதிர் - செல்வீர், கேண்மின் - கேளுங்கள், கூர்மதி - கூரிய அறிவு, பளிக்கறை - பளிங்கு அறை, மதமுறு - ஆணவம் கொள்ளும், கொடியர் - கொடியவர். | |
| | |