| பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர், தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர், பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி | |
| ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால் | 70 |
| விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித் துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும் இடையறா தருவி இழிதரல் மான நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை | |
| பொழிந்தனள்; மக்கள் புதுமழை கண்டு | 75 |
| விளைந்தெழு பயிர்போல் விம்மிதம் கொண்டனர், குளிர்ந்தனர் நெஞ்செலாம், கொடும்அறி யாமைக் களைகளைந் தெறிந்தனர், கருத்தினில் அடிமைத் தளைகள் தறிந்தனர், விடுதலை தாங்கினர்; | |
|
அரங்கின் தோற்றம் |
|
| மக்கட் பரப்பு வான்கடற் பரப்பென | 80 |
| மிக்குக் கிடந்தது, மேடைஓர் மரக்கலம் போல விளங்கிப் பொலிந்தது, பூங்கொடி மாலுமி என்ன மதர்த்து நின்றனள், கயல்புலி விற்கொடி கப்பற் கொடிபோல் | |
| உயர்வான் மிசையே ஓங்கிப் பொலிந்தது, | 85 |
| அலையிடை மணியென ஆங்காங் கவிரொளி நிலைவிளக் கெரிந்து நீளொளி பரப்பின, எங்கணும் அமைதி இலங்க ஐம்பொறி பொங்கும் உணர்வெலாம் புதியதோர் உணர்வாய்க் | |
| குவிந்தன மேடையில்; குள்ள நரிச்செயல் | 90 |
| பொதிந்த நெஞ்சினர் பொல்லாங் கிழைத்தனர்; | |
--------------------------------------------------------------- |
| துளக்கம் - நடுக்கம், இழிதரல் - இறங்குதல், மான - போல, சொன்மழை - சொற்பொழிவு, விம்மிதம் - பெருமிதம், தறிந்தனர் - அறுத்தனர், மதர்த்து - பெருமிதமுற்று. | |
| | |