பக்கம் எண் :

பக்கம் :84

12. மலையுறையடிகள் வாழ்த்திய காதை

பூங்கொடி மலையுறையடிகளை அடைதல்

 

 

தாயும் தோழியும் தன்னுடன் தொடர
ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர்
சாயா நாவினர் தங்கிடன் குறுகிக்
காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க
 
  மலையுறை யடிகள் மலரடி வணங்கிக் 5
     
 

பூங்கொடி நிகழ்ந்தன கூறல்

 
     
  காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம்,
ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம்,
தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம்,
அழுக்கிலா வாழ்க்கை ஆசான் றன்பால்
 
  திருக்குறள் கற்றுத் தெளிந்து நின்றதூஉம், 10
  பொருள்நூல் முழுதும் திரிபற உணர்ந்ததூஉம்,
அருள்விழி நாவலூர் அமுதத் தம்மை
விறலுறு தமிழன் மீனவன் கையன
பெறலருஞ் சுவடிகள் பெட்புடன் ஈந்ததூஉம்,
 
  ஏந்தல் மீனவன் இயல்பினை மலையுறை 15
  அடிகள் தம்பால் அறிகஎன் றறைந்ததூஉம்
முடிய வுரைத்து முகிழ்த்தசெங் கையினள்
படிமிசை நின்றனள் பழுதறு பூங்கொடி;
 
     
 

அடிகளார் அறவுரை

 
     
  மலையுறை யடிகள் மனங்களி கூர்ந்து,  
  `கலைபயில் செல்வி! கல்லா மாந்தர் 20
  நாட்டிடை மிகுதலின் நலிவுகள் மல்கின,  
     

---------------------------------------------------------------

  யாக்கையர் - உடலினர், திரிபற - மயக்கம் அகல, விறலுறு - வலிமையுறும், பெட்புடன் - விருப்புடன், ஏந்தல் - சிறந்தோன், முகிழ்த்த - கூப்பிய, படிமிசை - நிலத்தின்மீது,