பக்கம் எண் :

பக்கம் :86பூங்கொடி

மொழிக் கலப்பு

 
  செம்பொன் தன்னொடு செம்பு கலந்தால்
அம்பொன் அணிகள் அமைத்திடல் ஒல்லும்;
கலவா விடினோர் கலன்செய இயலாது;
 
  அதுபோற் பிறமொழி அகற்றுதல் கருதின் 50
  தமிழ்வள ராதெனச் சாற்றுவர் சிலர்தாம்;
அமிழ்தம் இனிக்க அச்சு வெல்லம்
கலப்போர் உலகிற் கண்டோ மில்லை;
உலப்பிலாத் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி
 
  கலப்பிலா தியங்கும், கற்றவர் அறிவர்; 55
  செம்பு கலந்தணி செய்வதும் இயற்கை,
செம்பும் மிகவே சேர்த்திடப் பெறுமேல்
கலன்செய அப்பொன் பலன்படா தொழியும்;
 
     
 

இசையுங் கூத்தும் பரப்புக எனல்

 
     
  நலமிகு நல்லாய்! நற்றமிழ் வளரப்  
  புலம்புலஞ் சென்று புரிகநற் றிருப்பணி; 60
  மங்கை! கேளினி மற்றொன் றறைகுவென்
துய்ப்போர்ப் பிணிக்கும் தொன்மைசேர் இசைநூல்,
மெய்ப்பா டனைத்தும் மேவிய கூத்துநூல்
எத்துணை எத்துணை இருந்தன தமிழில்!
 
  அத்துணை நூலும் அழிந்தன கடலால் 65
  எனநாம் இரங்கி அயருங் காலைக்  
  கனவெனக் கட்டுக் கதையெனக் கழறியும்
புலவோர் தம்மைப் பொல்லாங் குரைத்தும்
அலறுவோர் சிலருளர் அருகிய அறிவினர்
 
  அவருரை பொய்யென ஆக்குக நங்காய்! 70
  சுவடியின் துணையாற் சொல்லுக மெய்ம்மை;  

---------------------------------------------------------------

  உலப்பிலா - அழிவில்லாத, பிணிக்கும் - தன்வயமாக்கும், அருகிய - சுருங்கிய.