பக்கம் எண் :

மலையுறையடிகள் வாழ்த்திய காதைபக்கம் : 87

 

தமிழினமும் குரங்கினமும்

 
  தமிழிற் பற்றுதல் தவறுவோர் தம்மையும்
தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;
தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்
 
  தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75
  குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;
மரக்கிளை வாழும் மந்தியின் மானம்
நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!
மானம் பரவுதற் கானவை இயற்றுக;
 
     
 

தாய்மையும் பொதுப் பணியும்

 
     
  பிணியுறு குழவியின் பெருந்துயர் கண்டு, 80
  தணிவறு காதல் தாய்மனம் உருகிப்
பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,
அறியாக் குழவி அலறுதல் போல,
அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்
 
  பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85
  சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்
பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்
தாய்மைப் பண்பே தாங்குதல் வேண்டும்;
சேய்நலங் கருதிய தாய்,மருந் துணல்போல்
 
  உலகம் நலம்பெற உறுதுயர் வரினும் 90
  விலகா ததனை விழைந்திடல் வேண்டும்;  
     
 

காணாப் புதுமை

 
   
  ஆய்பொற் றொடியே, அறிகதில் அம்ம!
தகுமிசை யரங்கில் தாய்மொழி விடுத்துப்
புகுமொழி இசைத்திடும் புன்மையை உலகில்
 
  யாண்டுங் காண்கிலை ஈண்டுக் காண்குவை; 95

---------------------------------------------------------------

  குரக்கினம் - குரங்கினம், குழவி - குழந்தை, தணிவறு - நீங்காத.