பக்கம் எண் :

பக்கம் : 9

  நடக்கும் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று, தம் இயல்புக்கு, அத்தொழில் சிறிதும் ஒத்து வராதது கண்டு, மறுஆண்டே தமிழாசிரியப் பணிக்கு மீண்டார்.
        1966இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கல்வித்துறையினரால் இவர்மீது வழக்கொன்று கொண்டு வரப்பட்டது. `விசாரணை' நடைபெற்றது. அப்போது "இந்தியை எதிர்ப்பவன்தான் நான். அதற்கு என் பாடல்களே சான்று. ஆனால் இப்போது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்கள் பொய்யானவை. என்மீது பழி சுமத்துவதற்காக இட்டுக் கட்டப்பட்டவை" என்று வாக்குமூலம் கொடுத்தார். ஆய்வுக்குப் பின்னர் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
          இளமைக் காலத்தில் முருகனைப் பாடுவதே முத்தமிழ் கற்றதன் பயன் என்றிருந்த இவர் 1940 - க்குப் பிறகு சமுதாயச் சூழல் - நாடு - மொழி இவற்றையே பாடிவருகின்றார். சூழ்நிலையின் தாக்கமும், சுயமரியாதை இயக்க வேட்கையும், பாவேந்தர்பால் கொண்ட பற்றும் கடவுள் மேலிருந்த கருத்தை மாற்றிக் காலத்தின் தேவையைப் பாடவந்த கவிஞராக ஆக்கிவிட்டன.  
          கலப்புமணத்தின் தேவையைப் பற்றி கவிதை பலபாடிய இவர் தாமும் கலப்புமணம் செய்துகொண்டு தம் பிள்ளைகட்கும் கலப்புமணம் செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்துள்ளார். "அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்த பெருமை இவர்க்குண்டு.  
          சாதிசமயங்களுக்குள் ஆட்படாமை - நன்றி மறவாமை - நட்பைப்பேணல் - கொள்கைப் பிடிப்பு - குறிக்கோள் வாழ்வு - உதவும் உள்ளம் - ஒட்டார் பின் செல்லாமை - ஆசிரியர்ப் போற்றல் - ஆகியன இவர்தம் இயற்பிற் சில.
        எத்தனையோ இடர்ப்பாடுகளும், இக்கட்டுகளும் வந்த போதும், தாம் கொண்ட கொள்கையில் தடம் புரளாமல் தன்மானக் குன்றமாக விளங்குபவர். அரசவைப் பதவிகள்