பக்கம் எண் :

மனோன்மணீயம்
33

55.தோடம் ! - சுடு ! சுடு !
தீது நன்றென ஓதவ வெல்லாம்
அறியார்க் கறையும் வெறுமொழி யலவோ?
பாச்சி பாச்சி யென்றழும் பாலர்க்குப்
பூச்சி பூச்சி யென்பது போலாம்.
60.மன்னரை யுலகம் வணங்கவும் பார்ப்பார்க்
கன்னங் கிடைக்கவு மங்ஙன மறைந்து
மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய்.
அதினா னமக்கென்? அப்படி நினைக்கில்
இதுவரை யித்தனை நன்மையெப் படிவரும்?
65.பார்க்குது மொருகை. சுந்தரன் யந்திரங்
காக்கும் வகையுங் காண்போம் ; சுவான
சக்கரங் குக்கனைத் தடுத்திடும் வகையே
யந்திரத் தந்திர மிருப்பதென் றறியான்.
பித்தன் மெத்தவும் ! நமக்கினி யிதுவே
70.உத்தம வுபாயம். ஓகோ ! சேவக !
சித்தம் மெத்தக் களித்தோ மிந்த
மணவுரை கேட்டென மன்னன் றுணியப்
பாவனை பண்ணுவோம். ஏ ! ஏ ! சேகவ !

(சேவகன் எழுந்துவர)

இன்றுநா முற்றவிவ் வின்பம் போல
75.என்றும் பெற்றிலம். இணையறு மாலை
இந்தா ! தந்தோம். இயம்பாய்,
வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே. 1

(நேரிசை யாசிரியப்பா)

சேவகன். வாழ்க ! வள்ளால் ! நின்னுதா ரம்போல்
ஏழுல கெவற்றிலு முண்டோ?
80.வாழ்க !எப் போதும் மங்கலம் வரவே. 2
குடில, நல்லது ! விரைந்து செல்லாய் ! நொடியில்.
(தனிமொழி)

(சேவகன் போக)

மதியிலி ! என்னே மனிதர் மடமை !
இதுவு முதாரமா யெண்ணினன். இங்ஙனம்