பக்கம் எண் :

மனோன்மணீயம்
71

கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்?
என்கொல்அத் தோற்றம்? புகையோ?- மங்குலுக்கு
இந்நிற மில்லை. செந்நிறப் படாமென,
95.பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற்
கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன்
உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப்
பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப்
பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே?
100.இதோ ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ
பதாகையின் றொகுதி யன்றோ பார்க்கின்?
இடியுருண் டதுபோ லெழுமொலி தேரொலி !
அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்?
வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம் -
105.பொருதற்கு அன்றவன் வருவது. சரிசரி !
வதுவைக் கமைந்து வந்தான் போலும்.
இதுவென்? ஓகோ ! மணப்பாட் டன்றிது.

(வஞ்சிநாட்டுச் சேனை யணிவகுத்து வழியில் ஒரு புறம் போக.படைப்பாணர் பாட.)

(வஞ்சித் தாழிசை)

படைப்பாணர்.

அஞ்சலி லரிகாள் ! நும்
சஞ்சிதப் பெருவாழ்வெம்
வஞ்சியன் சினத்தாற்கண்
துஞ்சிய கனவேகாண்.

1


படைகள்.

ஜே ! ஜே ! ஜே !


பாணர்.

எஞ்சலில் பகைகாள் ! நும்
மஞ்சுள மணிமகுடம்,
வஞ்சியன் சினத்தானீர்
கஞ்சியுண் கடிஞையேகாண்.

2


படை,

ஜே ! ஜே ! ஜே !


பாணர்.

மிஞ்சிய பகைகாள் ! நும்
துஞ்சிய பிதிர்க்கூட்டம்,
வஞ்சியன் சினத்தாலென்,
நெஞ்சிலும் நினையார்காண்.

3