பக்கம் எண் :

மனோன்மணீயம்
81

இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுக நோக்கி

யிருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி

விசைத்தியங்கு மெரியெழுப்பி மீண்டுமவன் நோக்க

வேஷரக சியங்களெலாம் வெட்டவெளி யான.

26


நின்மல விபூதியுள்ளே பொன்மயமெய் தோன்றி

நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும்.

உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும்

உண்மைபெறு கண்ணிணையும் பெண்மையுருத் தெரிக்கும்.

27


கூசுமுக நாணமொடு கோணியெழில் வீச

குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும்.

வீசுலையின் மூக்கெனவே விம்மியவெய் துயிர்ப்பு

வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும்.

28


இவ்விதந்தன் மெய்விளங்க இருந்தமக ளெழுந்தே

யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும் :-

“தெய்வமொடு நீவசிக்குந் திருக்கோயில் புகுந்த

தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே !

29


மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ

வணிககுல திலகமென வாழ்வளொரு மங்கை.

எண்ணரிய குணமுடையள். இவள்வயிற்றி லுதித்தோர்

இருமகளி ரொருபுருட ரென்னவர் மூவர்.

30


ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார்.

ஒருத்திமகள் யான்பாவி. ஒருத்திமுழு மலடி.

செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்.

செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர்.

31


உடல்பிரியா நிழல்போல வோதியவப் புதல்வர்

உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன்.

அடல்பெரியர் அருளுருவர் அலகில்வடி வுடையர்.

அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்?”

32


உரைத்தமொழி கேட்டிருடி யுடல்புளக மூடி

யூறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க

எரிக்கவிற கெடுப்பவன்போ லெழுந்துநடந் திருந்தான்.

இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள்முன் தொடுத்தே.

33