பக்கம் எண் :

மனோன்மணீயம்
82

“மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம்

மடமகளென் றெனக்களித்தாள். மயங்கியதின்மகிழ்ந்து

தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையுந்

தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன்.

34


குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன்.

குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன்.

வெறுப்பாக நினைந்தென்மேல் வேதனைப்பட் டவரும்

வெறும்படிறென் னுள்ளமென விட்டுவில கினரே.

35


பொருள்விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பிவந்தோர்

பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை.

அருளரும்பி யெனைவிரும்பி யாளுமென ததிபர்

அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன்.

36


ஒருவார மொருமாத மொருவருட காலம்

ஓயாம லுன்னியழிந் தேன்.உருவங் காணேன்.

திருவாருஞ் சேடியர்க்குச் செப்பவவர் சேருந்

திசைதேய மெவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார்.

37


ஆயத்தார் கூடியெனை யாயவுந்தா னெட்டார்.

அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து,

தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும்.

திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன.

38


கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக்

கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க !

உண்டெனத்தம் யூகநெறி யுரைப்பவரே யல்லால்

உள்ளபடி கண்டறிந்தோ ரொருவரையுங் காணேன்.

39


உண்டெனிலோ கண்டிடுவன் ; இல்லையெனில் ஒல்லை,

யுயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி

கண்டுயிலு மில்லிடந்தீ கதுவவெளி யோடுங்

கணக்காவிவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன்.

40


தீர்த்தகுலம் மூர்த்திதலம் பார்த்துடலஞ் சலித்தேன்.

திருக்கறுபற் குருக்கள்மடந் திரிந்துமன மலுத்தேன்.

வார்த்தை கத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய.

மறுத்துறங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே.

41