| நிஷ்டாபரர். | | ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம் ! வேத வேதாந்தம் ஓதிநீர் தெளிந்தும் இரவெலா மிப்படி யிமையிமை யாதே பரிதபித் திருந்தீர்! கருணா கரரே ! |
| 5. | பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது ! போரிலை யாயினென்? யாருறார் மரணம்? எத்தின முலகி லெமன்வரா நற்றினம்? இத்தின மிறந்தோ ரெத்தனை யென்பீர்? ஒவ்வொரு தினமு மிவ்வன மொன்றில், |
| 10. | எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும். குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி ! பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து |
| 15. | அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண் தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து கருக்கொளுஞ் சினைஈ வெருக்கொளக் கௌவி விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின் முன்னிரு கையில் வெந்நுறக் கிடத்தி, |
| 20. | மார்பொடு வயிறுஞ் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவ்ஈ நொந்துநொந் தந்தோ ! சிந்தனை மயங்கி யெய்யா தையோ ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? |
| 25. | கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? |