பக்கம் எண் :

மனோன்மணீயம்
105

படைவீரர்.

மனோன்மணிக்கு ஜே ! ஜே ! ஜே !


யாவரும்.

 இளவரசிக்கு ஜே ! ஜே ! ஜே !


(குறளடிவஞ்சிப்பா)


ஜீவ,

நந்தாய்தமர் நங்காதலர்
நஞ்சேய்பிறர் நந்தாவுறை
நந்தேயமேல் வந்தேநனி
நொந்தாழ்துயர் தந்தேஇவண்
நிந்தாநெறி நின்றாரிவர்
தந்தாவளி சிந்தாவிழ,
அடிப்போமடல் கெடுப்போமுகத்
திடிப்போங்குட லெடுப்போமிடுப்
பொடிப்போஞ்சிர முடைப்போம்பொடி
பொடிப்போம்வசை துடைப்போமுயிர்
குடிப்போம்வழி தடு்ப்போம்பழி
முடிப்போமினி நடப்போம்நொடி,
என வாங்கு,

பெருமுர சதிரப் பெயருமின்
கருமுகி லீர்த்தெழு முருமென வார்த்தே.

(படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட)
(கலித்தாழிசை.)


படைப்பாணர் :

தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோ ரூதுமிந்தச்
சின்னமதி சயிக்குமெமன் செருக்கோழிமின் தெவ்வீர்காள் !
சின்னமதி ! சயிக்குமெம னெனச்செருக்கி நிற்பீரேல்,
இன்னுணவிங் குமக்கினிமே லெண்ணீரே யெண்ணீரே யிசைத்துளோமே.


படைகள்.:

ஜே ! ஜே !


பாணர் :


மறுகுறுதம் மூர்காக்கும் வயவர்புய மேவிஜயை
யுறைவிடமா விவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்கள் !
உறைவிடமா? விவர்வாளென் றோடிடீ ராயினினி
மறலிதிசை யொருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே.

(2)