கை' என்ற செய்யுள் அளவில் நக்கீரர் கூறிய வல்லுரையாகிய பிழை, உரை யிழத்தலும் விழித்தலும் பிழை செய்து சமாதானம் சொல்ல அறியாதவர் செயலாகக்கொண்டு சிவபெருமான் தாம் நக்கீரரிடத்தில் இயற்கை மணம் என்று கூறியதாகிய பிழைக்கு அச்சிவபெருமானே உரையிழந்து விழித்தாரென்று சொல்வாரு முளர். இச்செய்யுளில் தமிழின் பொருளிலக்கணம் தேவர்க்கும் தேவரனைய புலவர்க்கும் திகைப்பைத் தருவது என்பது குறிக்கத்தக்கது. முன்-முன்னொரு காலம் ; நக்கீரர் முன்னர், அல்லது அரனார் முன்னிலையிலும் ஆம். தாழிசை. 3. சதுமறை - சதுர்மறை, சதுர்-நான்கு, மறை-வேதம், மறைவான பொருள்களை உட்கொண்டிருப்பது, காரணஇடுகுறிப்பெயர், மக்களில் சிலவகுப்பாரும் பெண் பாலாரும் ஓதக் கூடாதென்று மறுக்கப்பட்ட தென்பது பண்டையுரை. சகம்-பூமி. முதுமொழி-முதுமையாகிய மொழி. அநாதி-ஆதியற்றது, தோன்றிய காலம் இன்னதென்று துணியப்பெறாதது. ஆரியமொழி நன்கு பரவுமுன் தமிழ் போன்ற ஒரு மூலமொழி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பரவாயிருந்ததென்பது பல மொழிகளையுங் கற்றுணர்ந்த ஆங்கிலேய பண்டிதர்களின் துணிபு என்பது நூலாசிரியர் குறிப்பது. தமிழ் முதுமொழி என்றது : இந்தியாவிற்கு ஆரியம் வருமுன் மூலமொழி தமிழேயா மென்பதும் இப்பொழுதும் இமயமலைச்சாரலி லிருக்கும் ஒருவகை வேடர்மொழி தமிழோடொற்றுமை யுடைய தென்பதும் நீலகிரியிலும் குடகிலுமுள்ள தோடர் குடகர் மொழிகளும் அன்ன என்பதும் பற்றி. முதுமொழி நீ அநாதி என்பதை நீ முதுமொழி அநாதி எனக் கூட்டுக. தாழிசை. 4. வேகவதி-வைகையாறு. காலநதி - காலமாகிய வெள்ளம். நினை கரவா காரணத்தின் அறிகுறி - உன்னை அகப்படுத்தாதென்பதைக் காட்டுவதோர் அடையாளம். வேகவதி- வேகமுடையது, வைகை. வேகவதிக்கு, உருபு மயக்கம். காலத்தைப் பிரவாகம் என்பது ஒரு மரபு. பிரளயப் பெருங்கடல் வெள்ளம் என்றலும் ஒன்று. ஒரு வெள்ளத்திற்கு வயப்படாமல் எதிர்த்துச் சென்றதனால் மற்றொரு வெள்ளத்திற்கும் வயப்படாமல் இழுத்துச் செல்லும் என்ற தன்மை விளங்குவதாம். இதனால் தமிழ்மொழி காலத்திற்கு வயப்படாமல் தோற்றம் அழிவின்றி நிலைபேறுடைய தென்பது தேற்றமாம். ஒரு சிற்றேடு :- மதுரையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கூன்பாண்டியன் காலத்து அவனும் அவனைச்சார்ந்த சமணர்களும் ஞானசம் பந்தரோடு அனல் புனல் வாதம் (சொற்போர்) நிகழ்த்தியபோது ஞானசம்பந்தர் எழுதி நீரிலிட்ட ஏடு எதிர்த்துச் சென்றது. இஃது அடைந்த இடமே திருவேடகம் என்னும் திருப்பதி. இவ் ஏட்டில் எழுதிய செய்யுளே "வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்...........துயர் தீர்கவே" என்பது. சிற்றேடு-சிறிய ஏடு, நறுக்கு என்க. இப்பொருளில் எண்ணாயிரஞ் சமண முனிவர் எழுதியிட்ட நாலடிச் செய்யுள் கொண்டு ஏடென்று குறி்ப்பாரு முளர். அவர் ஒரு என்பதற்கு ஒன்றென்னும் பொருளைக் கொள்ளாது ஒப்பற்ற என்னும் பொருளைக்
|