மனோன்மணீயம் விளக்கச் சிற்றுரை முதல் அங்கம் முதற் களம் [ ] இவ் அடையாளத்துட் காணப்படுபவை ஆசிரியரவர்கள் முதற்பதிப்பில் எழுதிச் சேர்த்துள்ளன. ஜீவக வழுதி மதுரை மாநகரை விட்டுத் திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு அதிற் கோட்டை முதலியன அமைத்து வீற்றிருக்குங் காலத்து, அவரிடத்து அன்பு மிகுந்த சுந்தர முனிவர் திருநெல்வேலிக்கு எழுந்தருளினார். எழுந்தருளிய சுந்தர முனிவரை வரவேற்குஞ் சிறப்புடன் நாடகந் தொடங்குகின்றது. 1. சிங்காதனம் - சிங்காசனம் (வடசொல்) அரியணை. 2. சேர்மின்-சேர்த்துவையுங்கள் ; சீரிதே - ஏ, அசை, சீரிது - சீர்மை என்னும் பண்படியாகப் பிறந்த ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று, இச்செல்லை, சீர்+இது என்றும் பிரிக்கலாம். 3. இணை - இரண்டு. கடிமலர் - கடி - மணம் ; உரிச்சொல். 7. கழைகறி - கரும்பைக் கடிக்கின்ற. களிறு இரைதலைப் பிளிறுதல் என்ப. 8. உளை - பிடரி மயிர். குரம் - குதி. ஓதை - ஓசை. ஓசை, ஒலி, முழக்கு என்பன ஒருபொருள் குறித்த பல சொற்கள். 18. விஜயீபவ (வடசொல்) - வெற்றியுண்டாக, ராஜேந்திரா - இராஜ - இந்திர - குண சந்தி. 23. விஜயன் - விசயன், மிகுந்த வெற்றியுடைவன், அர்ச்சுனன். 25. பவபாசம் - (வடமொழித்தொடர்) பிறப்பைத் தரும் பந்தம். 26. இரிந்திட - முறிந்தோட. 33. பீடு- பெருமை. 34. கடக்கரும் - கடக்க + அரும் - கடத்தற் கருமையான. 35. ஆசி - ஆசீர்வாதம் (வடசொல்) நன்மொழி. நனி-மிகுதி, உரிச்சொல். 36. புரி - கோட்டை, அரண். 40. ஊன்வரு பெருநோய் - பிறவிப் பிணி. 45. கேண்மோ - கேள்+மோ - மோ முன்னிலை யசை. 46. தென்பாண்டி - திருநெல்வேலி. 47. வாதவூரர் - திருவாதவூரிற்றோன்றிய மாணிக்கவாசகர். 48-51. [ இவ்வரிகளின் பொருள் பூகோள படம் நோக்கில் எளிதில் விளங்கும். நிலப் பகுதியை ஒரு பசுவாகவும் அதிற்பரத கண்டமாகிய இந்தியாவை அப் பசுவின் மடியாகவும் பாவிக்கில் தென்பாண்டி நாடு அம்மடியினின்றும் பால் சுரக்கின்ற சுரையாக, தானே தோற்றும். ] 48. சரதம் (வடசொல்) - உண்மை. 49. சுரை - சுரத்தலை உடையது. 54. பனிவரை - இமயமலை. 55. [ தலையாக - தலையாகவும் உம்மை - உயர்வு சிறப்பும்மை.]
|