56. குறுமுனி - குறுகிய வடிவங்கொண்ட அகத்திய முனிவர், மலை - மலையம், பொதியம். 58. பொன்வரை - பொன்மலை, இமயமாகிய மேரு. [ இங்கு அகத்திய முனிவர்க்குச் சூட்டி வழங்கும் பெருமை மலைய மலைமேல் ஆரோபிக்கப்பட்டிருக்கிறது. ] 59. சந்து - ஓர் முனிவர். இவர் காதின் வழி கங்கை வந்ததால் சாநவி என்னும் பெயர் பெற்றது. 60. வாயசம் (வடசொல்) - காகம். பொன்னி - காவிரி ; பொற்றாதுக்கள் உடைமையின் பொன்னி. இந்திரன் வேண்டுகோட் கிணங்கிய விநாயகக் கடவுள் சையகிரியிற் றங்கிய குறுமுனிவரின் கரக நீரைக் காக வடிவெடுத்து வந்து கவிழ்த்தினர். இதனால் பொன்னி காவிரி என்னும் பேரைப் பெற்றது. மேலும் இந்திரன் நந்தனவனமாகிய காலை விரியச் செய்தலால் காவிரி என்றலுமாம். இது, "சுரகு லாதிபன் தூய்மலர் நந்தனம் பெருக வார்கடற் பெய்த வயிற்றினேன் கரக நீரைக் கவிழ்த்த மதகரி சரணநாளுந் தலைக்கணி யாக்குவாம்" என்ற பிரபுலிங்கலீலைக் காப்புச் செய்யுளான் உணரப்படும். 64. வேழம் - யானை, மருப்பு - தந்தம் (வடசொல்) காழகில் - வைரம் பொருந்திய அகிற்கட்டை. 65. சந்தனாடவி - சந்தன + அடவி, தீர்க்கசந்தி, அடவி - காடு, சாடி - மோதி. 66. தடம்பணை - பெரியபள்ளத்தாக்கு ; பணை - வயல். 69. வாரம் - ஓரம். 70. [ தாமிரவர்ணி- தாமிரபர்ணி, தாமிரபன்னி, தாம்பிரபூரணி என்ற பல பெயருடன் வழங்கும் பொருனை நதி] பர்ணம் (வடசொல்) - இலை, இந்நதிநீரில் செம்புத்தாதுக்கள் எடுக்கப்படும். 70-71. தாம்பிர பரணியாறு கங்கை காவிரி இரண்டினும் மேம்பட்ட தென்பது. 73. பொன்னகர் - தேவலோக நகர், அமராவதி. கண்டனை - கண்டாய். 74. அடையலர் - பகைவர், பொருந்தாதவர். 74-75. [ அகழ் விரிவிற்கும் சத்துருக்களின் பயத்தளவிற்கும் உவமை.] 75. கட்செவி - பாம்பு ; கண்ணையே செவியாகவும் கொண்டது, அன்மொழித்தொகை. சுடிகை - உச்சிக்கொண்டை. 76. அகழ் - அகழ்தலுடையது, தோண்டப்பட்டது, கிடங்கு. 77. மஞ்சு - மேகம் (வடசொல்). துஞ்சு-தங்கு. இஞ்சியுரிஞ்சி - மதிலையுராய்ந்து (தேய்த்து). 78. உதயன் (வடசொல்) - ஞாயிறு, பகலவன். 75-78. மேகமண்டலமட்டும் அளாவியகோட்டைமதிலைச் சூழ்ந்து பாதாளம் வரைஆழ்ந்திருக்கும் அகழின் நிலைமையைக்கூறியவாறு. 79. பதாகை (வடசொல்) - கொடிச்சீலை. மீனம்-மீன் ; மின்னுவது. அம்-சாரியை. 80. உவாமதி - நிறைமதி, முழுநிலா. 79-80. மீன்கள் அழுக்குகளை உண்ணுதல் இயற்கை. 81. வெயில் - ஒளி. எயில்-மதில் 82. எந்திரம் (வடசொல்) - தீப் 83. வெறி - மயக்கம். பொறி, கிறி- வஞ்சகவழி. 88. குரவ - ஆசிரிய, பெரும, குரவன் முதல் வேற்றுமை. 89. துன்னலர் - பகைவர்.
|