பக்கம் எண் :

மனோன்மணீயம்
184

17. இதில் வரும் பழமொழி இன்மைப்பொருள்தர வழங்குவது. பசுவன்றி எருதீனாதென்க. ஈனுதல் பசுவே யன்றி எருதன்றென்க.

25. இயம்புகோ - இயம்புவேன்.

28-29. எட்பூ ஏசியநாசியாய் - என் மலரிலும் சிறந்த மூக்குடையவளே! பெண்கள் நாசிக்கு எட்பூ உவமை.

35. இடும்பை - துன்பம், இன்னல்.

38. இது மூர்க்கனும் முதலையும் கொண்டதுவிடா என்னுங் கருத்தது.

43. கைரவம்-ஆம்பல்

46. வள்ளை-வள்ளையிலை, காதுக்குவமைப் பொருள்.

47. வெம்மொழி - கொடுஞ்சொல்.

50. ஒருவர் - நடராஜர்.

59. [ஒக்குமோ - ஒப்பரோ]

66. பெட்பு - ஆசை.

75. கண்டோ - கற்கண்டோ, காரிகை யணங்கு - காரிகையாகிய அணங்கு, மிகவும் அழகுடையவள்.
ஒருபொருட் பன்மொழியுமாம்.

87. வற்கலை - வலியவுடை மரவுரி.

89. சிந்துரம் (வடசொல்) - சிவப்பு.

90. வாரிசம் (வடசொல்) - தாமரை.

100. கதுவும் - பற்றும்.

107-108. [சக்கரம் இருத்திடயந்திர ஸ்தாபனஞ் செய்ய.]

110. வடதளவுதரவாணி - ஆலிலை போல் பரந்த வயிற்றையுடைய வாணியே.

112. வாசிட்டாதி - வாசிட்டம் + ஆதி, வசிட்ட முனி செய்த (நூல்). வைராக்கியம் - இன்ப உலகத்தை வெறுக்கச் செய்வது.

119-120. ஆமையின் புறச் சார்பு அலவனொதுங்குவது ஏயும் - ஆமை புறவடிக்கும் அலவன் முழந்தாளுக்கும் உவமை என்றது குறித்து.

126. பிச்சி - பித்தி, பைத்தியக்காரி.

125. நச்சினேன் - விரும்பினேன்.

132. அயிராவதத்தன் - இந்திரன், அயிராவத மென்னும் வெள்ளையானை யூர்ந்து செல்பவன்.

133. அனிச்சம் - மெல்லிய பூ. இது பெண்களடி மென்மைக்குவமை. நெரிஞ்சில் - நெரிஞ்சிமுள்.

135. அஞ்சனம் (வடசொல்) - மை:கண்ணிடுமை. கஞ்சனக் கதுப்பு - கண்ணாடிபோன்ற கன்னம்,
(வடமொழித்தொடர்)

139. அணங்குறல் - வருந்தற்க. சுணங்கு - தேமல். பொன் - இலக்குமி, தங்கம்.

140. முகை முகிழ்த்தல் - பூத்தல். [தாமே நட்டு வளர்த்த முல்லை பூக்குங்கால் இராஜ கன்னியர்க்கு விவாகம் நேரிடு மென்பது காவிய வழக்கு.]வல்லை - விரைவு.

146. துச்சம் - அற்பம், புன்மை, வெறுக்கத்தக்கது.

148. சந்தம் (வடசொல்) - அழகு.

152. துன்று இரா - நெருங்கிய இருள். தோகாய் - உவமை யாகு பெயர், தோகை என்பதின் விளி.
[இக்களத்தில் மன்மதோபாலம் பனமும் கேசாதிபாத வருணனையும் ஒருவாறு வந்தமை காண்க.]

முதல் அங்கம்

மூன்றாம் களம்

8. நறை - தேன், வாசனை, ஆர் - நிறைந்த. தார் - மாலை.

14. ஓவல் - இடையறுதல். உஞற்றுமின் - செய்யுங்கள், மின் ஈன்று ஏவற்பன்மை.