பக்கம் எண் :

மனோன்மணீயம்
190

119. போத்து - ஆண்மயில், கம்புள் - சம்பங் கோழி.

122. குழீஇ - கூடி.

124. அந்தியங்காடியின் சந்தம் - அந்திக்காலத்துக் கடைவீதியி னழகு.

125. குழூஉக்குரல் - குழூஉக்குறிகளால் வியாபாரிகள் பேசும் வழக்கம் குறிக்கப்படுகிறது. குழூஉ - கூட்டம்.

113-126. வாசனை பொருந்திய பூவோடுகூடிய குவளைக் கொடிகளும் நானாவிதமான நிறங்களோடு கூடிய உப்பளங்களும் நிரம்பிய பூமியைக் கம்பளமாக விரித்துக் கொண்டும், தங்களுக்கு வெளிச்சந் தரும் பொருட்டுத் தாமரையினது 'சுத்தமாகிய மொட்டுகளைப் புகையிலாதவிளக்காகக் கொண்டும் நிலவு வெளிச்சத்தைத் தருகின்ற முத்துக்களையும், சோவிகளையும் பணமாகக் கொண்டும் நண்டுகள் தங்கள் பல விரல்களாலே (இலாப நஷ்டமாதயஞ் செலவு பார்த்து) அப்பணங்களை நோட்டம் பார்த்து எண்ணவும் பவளம்போன்ற கால்களையுடைய அன்னப்பட்சியும், தவிட்டு நிறக் கால்களையுடைய கொக்கும், சிவந்த கண்களையுடைய மயிலும், நீர்க் கோழியும், உரத்த சத்தத்தோடு கூடிய நாரையும், தம்மினத்தையே சினந்து பார்க்கின்ற காடையும், பொய்யாப்புள்ளும், மீன் கொத்திப் பறவையும் என்றிவை பலவும் அளவிறந்தன சேர்ந்து தங்கள் தலையைச் சிறிது குறிப்போ டாட்டியும், சிறகை யடித்தும், சாயங்காலவேளையில் அங்காடியின் (கடையின்) அழகோ வென்று கண்டோ ரையுறும் வண்ணம் தங்கள் தங்கள் சாதிக்குரிய சத்தத்தைப் பரவும்படி காட்டுகின்ற பெரிய ஓசை மட்டும் ஒரு சார் நிரம்பும்.

126. ஆர்தரும் - நிறையும்.

127. வீறுடை எருத்தினம் - இறுமாப்புடைய எருதுக் கூட்டம்.

128. ஈறு - முடிவு, எல்லை.

127-130. சங்கையில்லாத சகரர்களென்று சொல்லும்படியான உழவர்கள் வலியையுடைய உழவு மாடுகளைப் பொன்னேரியில் பூட்டி ஒருவர்பின் னொருவராக ஒழுங்காய் நின்றுழும் வரை வாழ்த்திப் பாடும் குரவைப் பாட்டானது ஓர் பக்கத்தே வழங்கா நிற்கும்.

131-145. வயலின் கண்ணே நெருங்கி யுண்டான நாற்றுகளை நீரைப்பாய்ச்சிப் பிடுங்குகிற உழத்தியரும், அந்நாற்றின் திரள்களைச் சுமைகட்டத் திரைக்கின்ற பெண்களும், அல்லது திரைத்துச் சுமை யாக்குகின்ற வுழத்தியரும், நடுகை வயலுக்குக் கொண்டுபோகின்றவரும் நடுகின்றவரும், களையாகிய விரோதப் பயிர்களை எடுக்கின்ற உழத்தியரு முதலாயுள்ள கள்ளுண்டு களிக்கும் இப்பள்ளிகளினுடைய உழத்திப் பாட்டினின்றும் மற்றவர்கள் பாடுகின்ற பாட்டுகளினின்று முண்டாகின்ற ஓசையானது எப்பக்கமுஞ் செல்லும்படி கேட்கப்படுவது ஓர் பக்கம். மலைபோலரிந்து குவிக்கப்பட் டிருக்கின்ற நெற்போரின்மீது பிணையல் (வட்டம் வருகின்ற) எருமைக் கடாக்களானவை மேகம்போல் விளங்க, முழங்குகின்ற மருதநிலப் பாறையானது மங்கல முழவுடனே கலந்து விம்முதல் ஒரு பக்கம். தம்முடலை ஓர் பீலியினால் தடவுதலும் அது படு முன்னமே கூச்சங்கொண்டு சிரிக்கின்ற சிறு பெண்களைப் போல அந்த வளம் பொருந்திய பூதேவி யானவள் கலப்பையோடு கூடிய கொழுவினது நுனியானது தன்மேல் படுமுன்னம் கூச்சத்தையடைந்து தன்னுடைய தேகமானது இளக, எப்பக்கமும் வாடா வளத்தோடு கூடிய செந்நெற் பயிராகிய ரோமாஞ்சமிட்டுப் பலவகையாகிய