மனோன்மணீயம்
242

மனோன்மணீய நாடகத்தில் வரும்

வரலாற்று விளக்கம்

(Allusions Explained)

பாயிரம்

அகத்தியர் கடல் குடித்த கதை

இந்திரன் முதலிய தேவர்கள் தங்கள் பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும் பல அசரர்களுடன் கடலில் ஒளித்துக் கொண்டபோது அகத்திய முனிவரை யடுத்து முறையிட, அவர் அக் கடலின் நீரைத் தமது ஒரு கையால் முற்றும் முகந்து பருகியருளினார். பின் இந்திரன் முதலியவர் வேண்டுகோளின்படி மீண்டும் உமிழ்ந்தனர் என்பது.

குடமுனிவர் வரலாறு

ஒருகாலத்தில் கடற்கரையிலிருந்த மித்திராவருணர் என்பவர்கள் ஊர்வசி என்னும் அப்சரசைக் கண்டு காம மீக்கூர்தலின், தங்கள் வீரியத்தை ஒருவர் குடும்பத்திலும் ஒருவர் தண்ணீரிலும் விடுப்ப, கும்பத்தினின்று அகத்தியரும் தண்ணீரினின்று வசிட்டரும் தோன்றினர் என்னும் நூல்கள். இதனால் அகத்தியர் குடமுனி, கும்பமுனி முதலிய திருநாமங்களை யெய்தினர்.

கடல் சாகரமெனப் படல்

சூரியகுலத்துச் சகரமகாராசன் அசுவமேத யாகம் (பரிவேள்வி) செய்தபொழுது பூமி வலம்புரிய அனுப்பிய குதிரையைப் பொறாமை கொண்ட தேவேந்திரன் மாயையால் ஒளித்து, கொண்டு சென்று பாதாள லோகத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த கபில முனிவர் பின்னே கட்டிவைக்க, அவ் வேள்விக் குதிரையை நாடிச்சென்ற சகர புத்திரர் அறுபதினாயிரவரும், பூமி முழுவதும் தேடிக் காணாமல் பாதாள லோகத்திற்குப் போகும் பொருட்டு, பரதகண்டத்தின் கீழ்ப்பாகத்தில் தோண்டிச் சென்ற பெரும்பள்ளம், பின் பகீரதன் கொண்டுவந்த கங்கை முதலிய நதிகளின் நீரால் நிறைந்து சாகரம் என்னும் பெயர் பெற்றுக் கடலோடு கூடித் தானும் கடலின்பாற் பட்டது. (சகரரால் தோண்டப்பட்டது சாகரம்).