நக்கீரர், அரனார் கதை மதுரையில் சண்பகமாறன் என்னும் பாண்டியன் தன் மனைவியுடன் உய்யான வனத்து மாளிகை உப்பரிகையில் தனித்திருந்தான். அப்பொழுது அடித்த காற்றில் மனையாளின் கூந்தலில் நறுமணந் தோன்றிற்று. இதனையுணர்ந்த மன்னன் இத்தகைய திவ்ய மணம் இவள் கூந்தலுக்கு இயற்கையில் அமைந்ததோ, பூச்சூடுதல் அகிற் புகைகாட்டல் பாமிளத் தைலந் தேய்த்தல் முதலிய செயற்கையால் ஆகியதோ வென்று ஐயுற்று வீடுவந்தும் தெளியானாய், சங்க மண்டபஞ்சென்று ஆயிரம் பொன்னை ஒரு கிழியில் முடிப்பாகக் கட்டித் தொங்கவைத்து என் ஐயத்தைத் தீர்ப்பவர் இப் பொற்கிழியைப் பெறுகவென்று யாவர்க்கும் அறிவித்தான். நக்கீரர் முதலிய சங்கப் புலவர்கள் யாவரும் தத்தம் கவிகளால் அரசனை யடுத்துத் தெரிவித்தும் ஒன்றும் அவனைத் திருப்தி செய்யவில்லை. ஐயமுந் தீரவில்லை. பொற் கிழியும் எடுபடவில்லை. ஆலவாய்க் கடவுளை அருச்சனைபுரிந்த வறிஞனாகிய தருமி தனக்கு மணமுடித்தற்குப் பணம் வேண்டுமென்று எண்குணக் கடவுளை இறைஞ்சி வந்தனன். அரனும் இது சமயம் நழுவவிடாது தருமிக்கு 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி' என்னும் பாடலைப் பாடிக் கொடுத்து மன்னனிடந் தெரிவித்துப் பொற்கிழியும் அறுத்தெடுக்க என்றனுப்ப, அவனும் அங்ஙனமே போய் அறுத்தெடுக்க முற்படுதலும் நக்கீரராகிய புலவர் 'கிழி அறுக்காதே நினது பாடல் குற்றமுடையது' என்று தடுத்தனர். கைக் கெட்டியது வாய்க் கெட்டாமையிற் கவன்ற தருமி விரைந்து இறைவனிடம் முறையிட்டனன். கேட்டதும் வெகுண்ட நுதற் கடவுள் புலவனுருக்கொண்டு சங்க மண்டபமடைந்து கவிக்குக் குற்றங் கூறியவர் யாவர் எனலும், நக்கீரர் துணிந்து அது தாமேயென்றும், கூறிய கவியில் பொருட்குற்ற முண்டென்றும், பெண்கள் கூந்தற்குச் செயற்கை மணமன்றி இயற்கை மணம் இன்றென்னும் விதிக்க, இறைவனாம் புலவன் வெகுண்டு நெற்றிக் கண்ணைத் திறந்து நிற்கவும் கீரர் நெற்றிக் கண் திறப்பினும் குற்றங் குற்றமே என்றனர். ஏடு எதிரேறியது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சமணர்களை வென்று சைவ மதத்தை நிலை நிறுத்தும் பொருட்டு மதுரை சென்றபொழுது சமணர் வைத்த தீயால் பாண்டியன் வெப்புநோய் தீர அதனைச் சம்பந்தர் நீற்றுப் பதிகத்தால் மாற்றியபின் நிகழ்ந்த அனல்வாதத்திலும் தோல்வியுற்ற சமணர் புனல்வாதம் புரியவேண்டுமென்று தென்னவனை வேண்ட அவனும் இசைந்ததற்கு இணங்க, இருதிறத்தாரும் தத்தம் சமய சித்தாந்தத்தை எழுதிய ஏட்டை ஓடுகின்ற வைகையாற்றி லிட்டதில் எதிரேறும் ஏடே மெய்ப்
|