அழித்து விடலாகாதே என்று உடன் கண்டத்தை இறுகப்பிடித்தனர். பிடித்த அளவில் அக்கடு உட்செல்லாது அக்கண்டத்தளவே நின்றது. நின்றவிடம் காளகண்டம் கறைக்கண்டம் நீலகண்டம் என்று யாவராலும் போற்றும்படி விளங்கியது. சிவபிரான் பிட்சாடனமூர்த்தி யானமை தாருகாவன வாசிகளாகிய முனிவர்கள் தங்கள் தவ மகிமையினால் செருக்குற்றிருந்தமையை அறிந்த பரமசிவன், அவர்களது தபோபலத்துக்குக் காரணம் அவர்கள் பத்தினிமார்களின் கற்பென்று அறிந்து அதையறிய வேண்டிக் கங்காளநாதராகப் புறப்பட்டு அவர்தம் ஆச்சிரமங்களிற் போய்ப் பிச்சையெடுப்பாராயினர். சிவபெருமானைக் கண்ட பத்தினிமாரெல்லாம் தம்மை மறந்து மையலடைவாராயினர். அரிச்சந்திரன் வாய்மை விசுவாமித்திரன் முதலில் அரிச்சந்திரனிடத்தில் வந்து யாகத்திற்காகச் சில பொருளை யாசித்து வாங்கி அதை அரிச்சந்திரனிடத்தேயே கொடுத்துப் போயிருந்தான். வசிட்டரும் தாம் கொண்டிருந்த சபதத்தை முடிக்கும்பொருட்டு நாட்டியப் பெண்களை அனுப்பி அரிச்சந்திரனிடத்துக் கடைசியாய் அரசுரிமையைப் பெற்றுக்கொண்டபொழுது அரசன் தன் குழுவோடு காட்டுக்குப் போகும்போது மறித்துக்கொண்டு, தாம் முன் அடைக்கலமாக வைத்த பொருளையும் தந்துபோகக் கட்டாயப்படுத்த அதன்பொருட்டு அரிச்சந்திரன், மனையாளாகிய சந்திரமதியையும் மகனாகிய தேவதாசனையும் விலைப்படுத்தித் தானும் விலைப்பட்டும் சுடலை காத்தும் இன்னோரன்ன துன்பங்களை வாய்மையின் பொருட்டே அனுபவித்தானென்பது. இந்திரன் வேடனாகியது அத்திரிமுனிவர் குமாரர் துருவாச முனிவர், ஒருகால், சிவார்ச்சனை செய்துவிட்டு வரும்போது இந்திரன் ஐராவதத்தின் மீது அமர்ந்து பவனி வருவது கண்டு அவனிடம் தம் கையிலிருந்த மாலையைக் கொடுத்தனர். அவன் அம் மலர்மாலையைப் பேணாது தன் யானைமத்தகத்தின்மேல் வைக்க அது கீழே தள்ளித் தன் காலால் மிதித்தழித்தது. இதனைக் கண்டு பொறாத துருவாசர் சினந்து, "சேட்டானை வானவ நின் சென்னி செழியரிலோர், வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின் கோட்டான நாற்கோட்ட வெண்ணிறந்த குஞ்சரமும் காட்டனையாக" எனக் கடுஞ்சாப மிட்டார். இதன்படியே இந்திரன் வேடனாகித் திரிந்து மதுரையடைந்து சிவலிங்க பூஜை செய்து தன் வடிவமடைந்தனன்.
|