பண்ணின்சுர முறைப்படி கிரகமாற்றிக்கொண்டு போகும்பொழுது பல இராகங்கள் உண்டாகும் முறையையும் சொல்லியிருக்கிறார்கள். இதோடு உடற்கூறு சாஸ்திரத்திலும், தத்துவ சாஸ்திரத்திலும், யோக சாஸ்திரத்திலும், வைத்திய சாஸ்திரத்திலும், பூகோள சாஸ்திரத்திலும் ஏழு சுரங்களைப்போல் 7, 7 ஆக அமைந்த இலக்கங்களும், 12 ஆக அமைந்த இலக்கங்களும், மற்றும் 24, 48, 96 போன்ற இலக்கங்களும் ஓசை அலைகளின் கணக்கும், யோக சாஸ்திரத்தின் உண்மையும், மனிதனுடைய தூல சூட்சும காரணசரீரங்களில் விளங்குகின்றனவென்றும், அம்முறைப்படியே ஒருயாழின் அமைப்பும், அதன் ஓசையும், கணக்கு ஒத்துவருகின்றனவென்றும் இப்பகுதியின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறேன். அதன்மேல் ஒரு ஸ்தாயியில் வரும் 7 சுரங்களும், 12 சுரங்களும் கிரகமாறும்பொழுது உண்டாகும் இராகபேதங்களும், ச-ப, ச-ம முறையில் ஒரு இராசி வட்டத்தில் சம அளவான ஓசையுடையதாய் 12 சுரங்கள் அமைவதையும், ஒரு ஸ்தாயியை 24 அலகுகளாகவும், 48, 96 போன்ற நுட்ப சுருதிகளாகவும், வகுத்து வழங்கிய பூர்வ தமிழ்மக்களின் முறைக்கு ஏற்றதும், தற்கால கணிதசாஸ்திரிகள் யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதுமான Geometrical Progression படி, ஆதாரசட்ஜம் ஒன்றானால் அதன்மேல் வரும் சட்ஜம் இரண்டாயிருக்க வேண்டுமென்ற அநுபவப் பிரமாணத்தின்படிக்கு, ஒன்றிலிருந்து இரண்டுவரையும் சுரங்கள் படிப்படியாய் ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதம் உண்டாகாமல் எப்படித் தொடர்ந்து நிற்கின்றனவென்பதற்கு , , , என்ற முறைப்படிச் சுரங்கள் வரும் தந்தியின் பின்ன பாகங்களும் ஓசையின் அலைகளும் ஸென்ட்சுகளும் காணக்கூடிய கணக்கும் சங்கீத சாஸ்திரத்திற்குப் பொருந்தும் ஒற்றுமையும் காட்டியிருக்கிறேன். இவையாவையும் ஒருங்கே பார்க்கும்படியாகப் பிரியப்படும் அன்பர்களுக்கு, மேரு முதல் மெட்டுவரை தந்தி நின்றாடும் இடம் 32 அங்குல நீளத்தில், சுரங்களும் சுருதிகளும் இன்னின்னவிடத்தில் வருகின்றனவென்று 892 ஆம் பக்கத்தின் பின் அளவு அட்டவணையும் வைத்திருக்கிறேன். இவ்வளவின்படி கிடைக்கக்கூடிய சுரங்களும் சுருதிகளும் வழங்கிவரும் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்னும் 4 பாலைகளிலும், தற்காலம் நமது அநுபவத்திலிருக்கும் கீர்த்தனங்களில் 67 கீர்த்தனங்களைத் திஷ்டாந்தமாகக் கொடுத்திருக்கிறேன். மேலும் மேற்றிசையார் வழங்கும் 12 சுரங்களில், ரி த என்ற சுரத்திலும் நி ம என்ற சுரத்திலும் சொற்பபேதமிருந்தாலும், அதாவது சட்சமம் 240, ரிஷபம் 270 வைபரேஷன் (ஓசையில் அலைகள்) என்று வைத்துக்கொள்வோமானால் தைவதம் 1(1/2)ஆன பஞ்சம முறைப்படி 405 ஆய் வரவேண்டும், அதற்குப் பதில் 400 என்று வருகிறது, நிஷாதம் 450 ஆனால் அதற்கு மேல் வரும் மத்திமம் 1(1/2)ஆன பஞ்சம முறைப்படி 675 ஆக வரவேண்டும். அதற்குப் பதில் 640 என்று வருகிறது. இச்சொற்ப பேதம் 2 சுரங்களுக்கும் ஏற்பட்டாலும், இவைகளும் சம அளவுள்ளதாக Geometrical Progression படி திருத்திக்கொள்ளலாமென்றும் மற்றும் சுரங்கள் பூர்வ தமிழ் மக்களின் முறைக்கு ஒத்ததாயிருக்கின்றனவென்றும், அவர்கள் வழங்கி வந்த அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்ற 4 ஜாதிகளில், ச க ப என்ற அகநிலை புறநிலை அருகியலாகும் மூன்று ஜாதிகளே Bass, Tenor, Alto என்னும் 3 parts ஆகுமென்றும், அவர்கள் குறித்த Staff notation படிச் சொற்ப அடையாளத்துடன் தென்னிந்திய சங்கீதத்தை விருத்தி பண்ணலாமென்றும் திஷ்டாந்தத்துடன் காட்டியிருக்கிறேன்.
|