உலகத்தவர் எவரும் கண்டும் கேட்டுமிராத நுட்பமான சுர ஞானத்தையும், அருமையான கீத முறையையும், பூர்வ தமிழ் மக்கள் உடையவர்களாயிருந்தார்கள் என்பதைக் காட்டச் சில பாண்டிய அரசர்களின் சாசனமும், அதன்முன் தமிழ்நாட்டிலிருந்து மெசொபொத்தேமியா, பாபிலோன், கல்தேயா, ஆசியா முதலிய விடங்களுக்குப் போய்க் குடியேறி ராஜ்யங்களை ஸ்தாபித்துப் பிரபலமாய் ஆண்டுகொண்டிருந்த தமிழ்மக்கள் மிகுந்த நாகரீகமுடையவர்களாய்ப் பலபல கலைகளில் தேர்ந்தவர்களாய்ப் பற்பல ஜாதியாராய் அழைக்கப்பட்டார்களென்றும் அவர்கள் பேசிய தமிழ்மொழி, எபிரேய, கல்தேய, பாபிலோனிய, அசீரிய, சுமேரிய, பாரஸீக, பெல்ச்சிய, பெர்குயிஸ், பிராகிர்த, சீத்திய, அங்கிலோ, ஜெர்மானிய, சமஸ்கிருத பாஷைகளில் மிக ஏராளமாய்க் கலந்துவருவதினால் தமிழ்மக்களே மிகப் பூர்வமாய் உள்ள குடிகளென்றும், அவர்கள் பல கலைகளிலும் சங்கீதத்திலும் தேர்ந்திருந்தார்களென்றும், அவர்களிருந்தநாடு கடலால் கொள்ளப்பட்ட காலத்தில் தங்களுக்குச் சமீபமுள்ள ஆசியா, சின்ன ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஒஷியானியா என்னுங் கண்டங்களின் கரையோரங்களில் தங்கினார்களென்றும், தப்பிப் பிழைத்தவர்களின் கலைகளின் தேர்ச்சிக் கேற்றவிதமாய் அங்கங்கே சங்கீதம், சிற்பம், சோதிடம் முதலிய அருங்கலைகள் விருத்தியாகிக் கொண்டு வந்தனவென்றும் நாம் காண்பதற்கு உதவியாகச் சில சரித்திரக் குறிப்புகளும் சொல்லியிருக்கிறேன். சுருதி விஷயமாய் நான் எழுதிவந்த இப்புத்தகம் முடிகிற சமயத்தில், His Highness Gaekwar மகாராஜா நடத்திய ஆல் இந்திய மியூஸிக் கான்பரென்ஸுக்கு வரும்படி, பரோடா திவான் சாகிப் மகா - - -ஸ்ரீ V.P. மாதவராவ் அவர்கள் C.I.E. விரும்பிக் கேட்டுக் கொண்டதினால், அங்கே போய்ச் சங்கீத ரத்னாகரரின் 22 சுருதிமுறையையும், தற்காலம் கர்நாடகத்தில் வழங்கி வரும் சுருதி முறையையும் விஸ்தரித்து ருசுப்படுத்திக்காட்டிக் கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை யாவரும் எவ்வித ஆட்சேபனையுமின்றி ஒப்புக்கொள்ளும்படிச் செய்தேன். அங்கு நடந்தவைகளைப்பற்றிப் பேப்பர்கள் சொல்லிய அபிப்பிராயங்களையும் தனித்து எழுதிய அபிப்பிராயங்களையும், விரோதமாய் எழுதியவர்களின் அபிப்பிராயங்களையும், அவற்றிற்கு என்னால் எழுதப்பட்ட மறுப்பையும் ‘கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளும் பரோடா கான்பரென்ஸும்’ என்ற தலைப்பின் கீழ் 995 -ஆம் பக்கம்முதல் 1139 -ஆம் பக்கம் வரை எழுதியிருக்கிறேன். சுமார் 2500 வருடங்களுக்குமுன், ச-ப(2/3) , ச-ம(3/4) என்றுமட்டப்பலகையால் அளந்து கொண்டுபோன அளவு மேற்றிசையைக் குழப்ப, சுமார் 1400 வருடங்களுக்குமுன் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளென்று சொன்ன பரதருடைய சமஸ்கிருத நூலும், சுமார் 700 வருடங்களுக்கு முன்னுள்ள சங்கீத ரத்னாகரருடைய சமஸ்கிருத நூலும் கீழ்த்திசையை உழப்ப, இவைகளால் சுருதியைப்பற்றிய நிச்சயம் இன்னதென்று தெரியாமல் யாவரும் கலங்க நேரிட்டதினிமித்தம் இதைச் சற்று விரிவாக எழுதநேரிட்டது. உண்மையை யறியவேண்டுமென்று அவாக்கொண்ட விவேகிகளுக்கு இவை போதுமென்றெண்ணுகிறேன். என்றாலும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளையும், அவைகள் வழங்கி வரும் கீர்த்தனங்களையும் பற்றித், தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தார் என்ன அபிப்பிராயப்பட்டார்களென்று நாம் அறிய விரும்புவோமாகையால், 1916u ஆகஸ்டுமாதம் 19s இல் தஞ்சாவூரில் நடந்த சஙகீத வித்யா மகாஜன சங்கத்தைப்பற்றியும், அதில் தமிழில் தேர்ந்த புலவர் பஞ்சாயத்தின் அபிப்பிராயத்தையும், கணித சாஸ்திரிகள் பஞ்சாயத்தின் அபிப்பிராயத்தையும், சங்கீத வித்வான்கள் பஞ்சாயத்தின் அபிப்பிராயங்களையும் அதன்மேல் பிரஸிடென்ட்
|