பக்கம் எண் :

12

மகா---ஸ்ரீV.P. மாதவராவ் C.I.E. அவர்களின் அபிப்பிராயத்தையும், மைசூர் வைணீக சிகாமணி மகா---ஸ்ரீ சேஷண்ணா அவர்கள் அபிப்பிராயத்தையும், ‘கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளும் தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கமும்’ என்ற தலைப்பின் கீழும், இப்புத்தகத்தின் கடைசியில் விஜயநகரம் சமஸ்தான வித்வான் வைணீக சிரோமணி, மகா---ஸ்ரீ வேங்கடரமணதாஸ் அவர்கள் அபிப்பிராயத்தையும் சொல்லியிருக்கிறேன். அச்சபையில் வந்திருந்த தமிழ்ப் புலவர்கள் சொல்லிய அபிப்பிராயங்களைப் பொருள் அட்டவணையின் பின் வரும் பாயிர வரிசையில் சேர்ததிருக்கிறேன்.

இப்புத்தகத்தில் பூர்வ தமிழ்மக்களைப் பற்றியும், தமிழ் மொழியைப்பற்றியும், இசைத்தமிழ் அல்லது சங்கீதத்தைப்பற்றியும், அதில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளைப் பற்றியும், அதற்குச் சம்பந்தமான பல குறிப்புகளைப்பற்றியும் சொல்லியிருந்தாலும், சுருதியைப்பற்றி பலர் சொல்லும் பல அபிப்பிராயங்களையும், பரதர், சங்கீத ரத்னாகரர், பாரிஜாதக்காரர் முதலியவர்கள் சொல்லும் அபிப்பிராயங்களையும், பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த சுருதிகளையும் சொல்லி, தமிழ்மக்கள் வழங்கிவந்த சுருதிகளே தற்கால வழக்கத்தி லிருக்கின்றனவென்றும், இனி வருங்காலத்தவரும் அதன் முக்கியமறிந்து மேன்மையானதென்று கொண்டாடக்கூடியதென்றும் விளங்கக்கூடிய குறிப்புகளை அதிகமாய்ச் சொல்லியிருக்கிறேன். பூர்வ தமிழ் மக்களில் தவ சிரேஷ்டரான பெரியோர்களின் கருத்தையும் வசனங்களையும் சொன்னேனேயொழிய புதிதாக நான் சொல்லிவிட்டதாகப் பெருமை பாராட்டிக்கொள்ளவில்லை.

எனக்கு முன்னுள்ள பெரியோர்களின் வசனங்களை அவர்கள் சொன்னபடியே என் புத்தகத்தில் எடுத்தாண்டிருக்கிறேன். அவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டுச் சேகரித்த அருமையான விஷயங்களை அவர்கள் பேருடனும் புஸ்தகத்தின் பக்கங்களுடனும் எழுதியிருக்கிறேன். மலர்ந்த பூவின் மெல்லிய இதழ்களிலிருக்கும் மகரந்தத்தையும், அதனடியிலுள்ள தேனையும் எடுக்கவிரும்பிய தேனீ, அம்மலரைச் சுற்றிவந்து ரீங்காரம் செய்து, மகரந்தத்தையுந் தேனையும் மெதுவாக எடுத்துக்கொண்டு மறுபடியும் அதைச் சுற்றி ரீங்காரம் செய்து போவது போல, முன்னோர்களின் பேர்களை மனதார வணங்குவதைத் தவிர வேறு என்ன பிரதியுபகாரம் என்னால் அவர்கட்குச் செய்ய முடியும் ?

சங்கீதத்தைப்பற்றிய சில அருமையான விஷயங்கள் பூர்வ தமிழ்மக்களின் வழக்கத்திலிருந்தனவென்று, சிலப்பதிகாரத்திற் கூறிய சேரன் செங்குட்டுவன் தம்பியும் தவசிரேஷ்டருமான இளங்கோவடிகளுக்கும், அவர் எழுதிய பொருள் நிறைந்த அகவல்களுக்கு அவருக்குச் சுமார் 1000 வருடங்களுக்குப்பின் அரும்பத உரை எழுதிய ஜெயங்கொண்டான் கவிச்சக்கிரவர்த்திக்கும், இவருக்கு 100 வருடங்களுக்குப்பின் சிலப்பதிகாரத்திற்கு உரையும் அவ்வுரையில் அக்காலம் சங்கீதத்திற்கென் றெழுதிய நூல்களின் பல மேற்கோள்களையும் எழுதிய அடியார்க்கு நல்லார்க்கும், இவ்வருமையான நூல் இராமபாணத்தால் அழிந்து போகாமல், பலபிரதிகளைத் தேடிப் பரிசோதித்து உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி அச்சிட்டுத்தந்த, பிரஸிடென்ஸி காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர், உத்தமதானபுரம் மகா மகோபாத்தியாயர் மகா---ஸ்ரீ சாமிநாதையர் அவர்களுக்கும், நானும் தமிழ்மக்களும் எவ்வித நன்றி பாரட்டக் கூடியவர்களென்று சொல்ல இயலாதவனாயிருக்கிறேன்.

இப்புத்தகம் ஆரம்பித்ததுமுதல் முடிவுவரையும் இங்கிலீஷ் வாக்கியங்களைத் தமிழில் திருப்பியும், தமிழிலுள்ளவைகளை இங்கிலீஷில் மொழிபெயர்த்தும், பிழை பரிசோ