என்கிற ஏழு சுரங்களும் மத்தியஸ்தாயாகிறது. இதன் மேல் தனுசு, கும்பம், மீனத்திலுள்ள ப, த, நி என்ற மூன்று சுரங்களும் ச, ரி, க என்ற சுரங்களாகி தாரஸ்தாயாகிறது. இளி, குரலாகும் பொழுது அது பஞ்சம சுருதியென்றும், துலாத்துள்ள உழை குரலாகும்பொழுது மத்திய சுருதியென்றும் தோன்றுகிறது. அதாவது சாரணைத் தந்தியை அனுசாரணைத் தந்தியின் ப வுக்குச் சமமாகவும், ம வுக்குச் சமமாகவும் சேர்த்துக் கொள்வதென்பது கருத்து. மேற்காட்டிய இடமுறை திரிந்த வட்டப்பாலை, யாழில் வழங்குவதாகச் சொல்லுகிறார். இது சகோட யாழில் வழங்கி வந்ததென்று தெரிகிறது. ஸ்திரிகளுக்குப் பிரியமானதென்று சொல்லப்படுகிறது. இதன் முக்கிய அம்சம் இதன் பின் பார்ப்போம். இப்படி இடமுறை திரிகையில் பன்னிருபாலை பிறக்கும். அப்பன்னிரு பாலையுள் ச வின் 4 ஆவது சுருதியில் பிறக்கும் ப, த, நி, ச, ரி, க என்ற பெரும்பாலை ஏழும் ச வின் மற்ற சுருதிகளில் பிறக்கும் மற்ற சிறு பாலை ஐந்தும் பிறக்கும் விபரமடங்கிய அட்டவணையைப் பின் காண்க. இட முறைதிரிதல் என்பது தொட்ட ராசிக்கு மேல் ஐந்தாம், ஐந்தாம் ராசியாகிய ச-ம பொருத்தமுள்ளதென்று நாம் கவனிக்க வேண்டும். ரிஷபத்திலிருந்து தனுசு ஐந்தாம்; குரலுள் இளியாம். மீனத்திலிருந்து துலாம் ஐந்தாம்; உழையுள் குரலாம். துலாத்தினின்று ரிஷபம் ஐந்தாம். தனுசினின்று கடகம் ஐந்தாம். கடகத்தினின்று கும்பம் ஐந்தாம். இப்படியே இடமுறை திரிதல் அவரோகண கதியாகும் அல்லது ச-ம முறையாம்.
|