பக்கம் எண் :

811
மனுட சுவாசத்திற்கு யாழ் ஓசையின் அலை ஒத்திருக்கிறதென்பது.

பெரியவர்கள் கண்டுகளிப்பதைப்போல். சந்தோஷப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இதுபோலவே முதல்வனின் திருவிளையாட்டுமிருக்கிறதென்று நாம் அறியலாம். வெவ்வேறுரூபத்துடனும் வெவ்வேறு அளவுடனும் குணத்துடனும் அளவிறந்த சிருஷ்டிகளையண்டாக்குவதே அவன் திருவிளையாட்டென்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். மண்ணினால் உருவாக்கப்பட்ட ஆதிமனுடனின் நாசியில் தமது சீவ சுவாசத்தை ஊத அவன் சீவாத்துமாவானான் என்று சத்தியவேதத்தில் சொல்லப்படுகிறது. அவன் செயலைப்பெற்றயாவும் தங்கள் தங்கள் இனத்தை விருத்திசெய்யும் இயற்கையையும் நாம் அறிவோமே. நாதத்தின் செயல்களையும் நுட்பமான அவற்றின் அலைகளையும் அறிந்துகொள்வது சுலபமல்ல, மனுடத் தோற்றத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐந்து பொறிகளும் ஊறு, சுவை, ஒளி, ஓசை, நாற்றம் என்னும் புலன்களும் யாவருக்கும் ஒன்றுபோலிருந்தாலும் நிறம் உருவம் குணம் முதலியவைகள் முற்றிலும் வெவ்வேறாக அமைந்திருப்பதுபோல ஓசையின் அலைகளும் வெவ்வேறாயிருக்கிறதென்று விவேகிகள் அறிவார்கள்,

கிராமபோன் என்னும் கருவியில் வாயகன்ற ஒரு குழாயின் வழியாய்ச் சொல்லப்படும் வார்த்தைகள் பின்னால் வைக்கப்பட்டிருக்கும் மெழுகுச் சக்கரத்தில் அப்படியே எழுதப்பட்டுப் பின் நாம் சொன்னதுபோலவே திரும்பச்சொல்வதை நாம் கண்டு ஆச்சரியப்படவில்லையா? அதுபோல் அமைந்த யந்திரமொன்றைப் பூமியின் உன்ன தமான இடங்களில் வைத்து வெகு தூரத்தில் பேசப்படும் வார்த்தைகளையும் சொல்லப்படும் செய்திகளையும் தந்தியில்லாமல் அறிந்துகொள்ளுகிறார்களே! ஆகாயத்தில் செல்லும் வெகு நுட்பமான ஓசையின் அலைகளுக்கு எழுத்துக்களும் அவ்வெழுத்துக்களுக்கு ஓசையும் திரும்ப அமைகிறதே, அவ்வோசையின் எழுத்துகள் நாம் பேசும் வெவ்வேறு பாஷையின் வெவ்வேறு எழுத்துக்களைப் போலில்லாமல் இயற்கை அமைப்பின் ஒசைகள் யாவற்றையும் எழுதிக்கொள்ளக்கூடிய ஒரே வகையாயிருக்கின்றன. இவ்வெழுத்துக்களின் வடிவம் ஒவ்வொரு பிராணிகளின் அமைப்பிலும் புல் பூண்டு செடி கொடிகளின் அமைப்பிலும் நிரச வஸ்துக்களின் அமைப்பிலும் விளங்கி நிற்கிறது. இத்தலையான எழுத்திற்கு ஏற்றவிதமாக ஒவ்வொரு பொருளும், செயலும், குணமும், பருமனும் பெற்று விளங்குகிறது. இத்தலையான எழுத்தை அறிந்துகொள்ள விவேகிகள் இரவு பகல்்இடைவிடாமல் விசாரித்துக் கொண்டே வருகிறார்கள். அதிக நுட்பமான விசாரணையின் முடிவை நாம் இச்சமயத்தில் எதிர் நோக்காமற் போனாலும் வெளிப்படையான சில கருத்துக்களை மாத்திரம் பார்ப்பது நல்லது.

ஒரு மனுடன் இரவு பகல் 60 நாழிகைகொண்ட ஒரு நாளில் 21,600 சுவாசம் விடுகிறான். அப்படியே ஒரு நாளில் சூரியனானவன் 21,600 தாம் மகமேருவைச் சுற்றிக்கொண்டு வருகிறான் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அடியில் வரும் சில வாக்கியங்களில் அவைகளைக் காண்போம்.

மைத்திராயண்ணியுபநிஷத் பக்கம் 59.

அந்தராயத்துமாவினுடைய கெதியினால் வெளியாத்துமாவின் கெதியானது அனுமானிக்கப்படுகிறதென்று சொன்னார். (எப்படி என்றால் ஒரு பகல் ஒரு இரவு சேர்ந்த ஒரு நாளில் சூரியன் மகாமேருவை பிரத க்ஷிணம் செய்துகொண்டு பிரும்மாண்டத்தைச் சுற்றி வருகிறான். அந்த ஒரு நாளில் பிராண வாயு (21,000) அல்லது சரியாய்ச் சொல்வதானால் (21,600) சுவாசமாக தேகத்திற்குள் சுற்றி வருகிறது. சூரியனுடைய கால அளவைக்கொண்டு இவ்வளவு சுவாச மாச்சுதென்றும் சுவாசத்தினுடைய அளவைக்கொண்டு சூரியனுடைய (நாழிகை விநாடி முதலிய) அளவைக் கணக்கிடலாமென்றும் தாத்பரியம். இதன் பேரில்தான் மனிதனுக்கு நூறுவயது கணக்கிடப்பட்டிருக்கிறது.