| வீட்டுத்தொல்லை எல்லாம் அடிக்கடி வந்து வந்து உலக அமைதியைக் கெடுக்கும். ஆகையால் இவற்றைத் தனிமனிதர் கையில் விட்டு வைக்காமல், காப்பாற்றினால்தான் அரசியல் நடக்கும்; மக்கள் வாழ முடியும். ஆனால் அந்த அரசியலை எப்படி நடத்த வேண்டும், யார் நடத்த வேண்டும் (புகை வண்டியைச் செலுத்தும் திசையும், ஓட்டும் ஆட்களும் போல்) இந்த இரண்டிலும் தனியுரிமை வேண்டும். மக்கள் தனித்தனியாகத் தம்தம் கருத்தை வெளியிடும் உரிமை வேண்டும். அந்தக் கருத்துகள் பெரும்பான்மையாகத் திரளும்போது எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலோர் தேர்ந்தெடுக்கும் சிலரிடமே நடத்தும் பொறுப்பை விட வேண்டும். இந்த அளவில் தனியுரிமை கட்டாயம் வேண்டும். தேர்தல் இன்று உள்ள தேர்தலில் இந்தத் தனியுரிமை இருக்கின்றதே என்று கூறலாம். ஆனால், இந்தத் தேர்தல் முறையில் தனியுரிமை பறிக்கப்படுகின்றது என்பதை மறக்கக்கூடாது. மனிதன் மூளையுடையவன்; ஆகையால் அந்த மூளையைக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளவும் முடியும்; எதற்கு வேண்டுமானாலும் காரணம் கண்டு "ஏமாற்றமல்ல, வெற்றிதான்" என்று சொல்லிக் கொள்ள முடியும்; இவற்றைவிட, மூளை குறைந்த மற்றவர்களை ஏமாற்றுவது எளிதில் முடியும். இந்தத் தேர்தல் முறையிலும் வாக்குரிமை என்று |