| தேர்தலில் நிற்பவர் யார் தெரியுமா?" என்று அறிமுகப்படுத்துகின்றார்கள். அவருடைய குணம் ஒன்று இரண்டு இருந்தால் அவற்றை உயர்வு நவிற்சியாகப் புகழ்ந்து பேசுகின்றார்கள். குற்றங்களை வெளிப்படுத்தவோ கனவிலும் நேராதபடி காத்துக் கொள்கின்றார்கள். அவருக்குப் போட்டியாக நிற்கும் மற்றொரு கட்சியாரின் குற்றங்களை எல்லாம் அம்பலப் படுத்துகின்றார்கள். பொது மக்களுக்கு ஒரு வகை நிலைமையை ஏற்படுத்தி மயக்குகின்றார்கள். குணம் நாடிக் குற்றமும் நாட வேண்டும் என்ற ஆராய்ச்சிக்கோ, மிகை நாடி மிக்க கொளல் என்ற தேர்தலுக்கோ பொது மக்களுக்கு உரிமை இல்லை. தலைநகரங்களிலிருந்து கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுகின்றார்கள். "இப்போது தேர்தலில் நிற்பவர்கள் யார் யார் என்ற கவலையே இருக்கக் கூடாது. எந்தக் கட்சியின் சார்பாக நிற்கின்றார்கள் என்பதையே நாட்டின் நன்மையைக் கருதுவோர் உணர வேண்டும். நம் கட்சியின் சார்பாக நாங்கள் நிறுத்தியுள்ள உறுப்பினர்களுக்கே வாக்குரிமை கொடுத்துக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். கட்சியின் சார்பாக ஒரு துரும்பு நின்றாலும் அந்தத் துரும்புக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்தால் அதுவே நாட்டின் எதிரிகளை முறியடிக்க நீங்கள் செய்கின்ற அரிய பெரிய தொண்டு. இந்த உண்மையை மறக்காமல் போற்றித் தேர்தல் பெட்டியின் முன்னே நிற்கும்போது கடமையைச் செய்யுங்கள்", என்று அறிக்கை விடுகின்றார்கள். கட்சியின் பத்திரிகைகளோ நம் உயர்வு நவிற்சியையும் ஒரு தலைத் தீர்ப்பையும் அளவில்லாமல் பெருக்கிப் பக்கம் பக்கமாகத் தீட்டும். ஆகவே, பொதுமக்களுக்கு உறுப்பினரை ஆராயும் பொறுப்பு வந்து சேர்கிறது. |