| அதிகாரிகளே செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பார்கள். அணையில் ஒரு சிறு பழுது நேர்ந்தாலும் பல ஊர்களுக்கும் இடையூறும் பெருந்துன்பமும் ஏற்படும். கெட்டவர்கள் அந்த அணையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், அவர்கள் அத்தனை ஊர்களையும் எளிதில் அல்லல்படுத்த முடியும். நல்லவர்கள் பொறுப்பில் அது இருந்து ஒழுங்காக நடைபெற்றால் ஊர்கள் எல்லாம் கவலை இல்லாமல் அமைதியாக வாழ வழி உண்டாகும். இப்போது உணவுப் பொருளைக் குவிக்கும் முறைகளும் பெரிய பெரிய கைத்தொழிற்சாலைகளும், அரசியல் தலைமை நிலையங்களும் பெரிய நகரங்களில் அமைந்திருக்கின்றன அல்லவா? நாட்டிலுள்ள எல்லா ஊர்களும் இந்தப் பெரிய நகரங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லையா? இந்த நகரங்களில் தேங்கிய உணவுப் பொருள்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டால் நாட்டில் உணவு இல்லாத பஞ்சம்; கைத்தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் நடந்தால், நாடு முழுவதும் உடை முதலியவற்றிற்குப் பஞ்சம், அரசியல் தலைமை நிலையங்களில் ஊழல் மலிந்தால் நாடு முழுதும் ஊழல். இவ்வாறு எல்லா ஊர்களும் இருக்கின்றது. இந்த நிலைமையை நாட்டுத் தேவை நிலை என்று குறிப்பிடலாம். குடிசைக் கைத்தொழில்கள் மட்டும் நிறைந்து போக்குவரவு குறைந்து உலகத் தொடர்பு குன்றியிருந்த பழங்காலத்தில் ஊர்த்தேவை நிலை இருந்தது. குடிசைக் கைத்தொழில்கள் குன்றி, போக்குவரத்து அளவில்லாமல் பெருகி உலகப் பிணைப்பு மிகுந்துள்ள இந்தக் காலத்தில் |