| நாட்டுத் தேவை நிலையே இருக்கமுடியும். இதை மாற்றியமைக்க முடியாது. மாற்றியமைக்க வேண்டுமானால், முதல் முதலில் செய்ய வேண்டிய கடமை குடிசைக் கைத்தொழில்களை வளர்ப்பது அல்ல; ரயில், மோட்டார் முதலிய போக்குவரவுக் கருவிகளை உலகெங்கும் நிறுத்துவதே நேர்மையான வழி. வெளி நகரத்திலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் பொருள்கள் வர வில்லையானால், அந்த அந்த ஊரார் அவரவர்களுக்கு வேண்டிய உடை முதலியவற்றைத் தாமே செய்து கொள்வார்கள். ஆகவே, குடிசைக் கைத்தொழில்கள் சொல்லாமல் வளர்ந்துவிடும். அதை விட்டுவிட்டு, ஒரு பக்கம் யந்திரங்களை அளவில்லாமல் பெருகவிட்டு, போக்குவரவுக் கருவிகளையும் போற்றிக் கொண்டிருந்தால், ஒரு நாளும் குடிசைக் கைத்தொழில்கள் வளர முடியாது. அவற்றை அகற்றாமல், குடிசைக் கைத்தொழில்களை வளர்க்க முயல்வது, கண்ட இடமெல்லாம் இனிய தின்பண்டங்களைப் பரப்பி வைத்துவிட்டுக் குழந்தைகளை உணவுப் பத்தியம் இருக்கச் செய்வது போன்றது. ஆகவே, வெறுங்கனவு காண்பது போல் ஏங்குவதால் பழைய நிலைமை வராது. அதை மாற்ற உண்மையான முயற்சி வேறு; அதைச் செய்வது அருமையிலும் அருமை. அது வரையில் ஊர்த் தேவை நிலை திரும்பாது; நாட்டுத் தேவை நிலையே வாழும். ஆனால் எப்படியாவது நிலைமை மாறுவது நல்லது என்று நல்லெண்ணம் கொண்ட சிலர், உணவையும் மற்றப் பொருள்களையும் பொறுத்தவரையில் ஊர்த்தேவை நிலையை அமைக்க வேண்டும் (Decentralisation) என்று திட்டம் இடுகின்றார்கள். அணையோ கட்டி ஆகிவிட்டது. ஏரிகள் பழையபடி இல்லை. ஏரிகளுக்கு நீர் வராதபடி |