பக்கம் எண் :

உரிமைப் பஞ்சம் 131

அணையே எல்லா நீரையும் தடுத்து வைத்திருக்கின்றது. அப்படி இருப்பது
தெரிந்தும், பழையபடியே ஏரிகளையே நம்ப வேண்டும். ஏரிகளாலேயே நீர்
பாய்ச்ச வேண்டும் என்று முயற்சி செய்வதைப் போன்றதுதான் இது. ஒன்று,
அணையை உடைத்தெறிந்து நீரை ஏரிகளுக்குக் கொண்டு வர வேண்டும்.
அல்லது அணையை ஆளும் பொறுப்பில் பங்கு பெற வேண்டும்; அந்தப்
பங்கு உரிமையான பங்காக இருக்க வேண்டும்; நன்மை செய்யாத முறையில்
இருந்தால் அதை மாற்றியமைக்கும் உரிமையும் இருக்க வேண்டும்.

வலிய தலைமை

     ஆட்சி முறையிலும் இவ்வாறு மாறுதல் செய்ய வேண்டுமானால்
பஞ்சாயத்து என்னும் ஊர் மன்றங்களை அமைக்கச் செய்ய வேண்டும்.
ஆனால் அந்த ஊர் மன்றங்களை அமைக்கும் பொறுப்பும் கலைக்கும்
பொறுப்பும் அந்த அந்த ஊராருக்கே இருக்க வேண்டும் தவிர, தாலுக்கா
அதிகாரிக்கோ, ஜில்லா அதிகாரிக்கோ, மாகாண அதிகாரிக்கோ,
அமைச்சருக்கோ இருக்கக் கூடாது. இருந்தால் அது உண்மையான மாறுதல்
அல்ல. இரண்டாவதாக, அந்த ஊர் மன்றங்களுக்குப் பாராளுமன்றத்தை
அசைக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். அதாவது, முன் குறிப்பிட்டது போல்,
ஊர் மன்றத்திலிருந்து தகுதித் தேர்தல் நடைபெற வேண்டும்; அது
படிபடியாகப் பாராளுமன்றத்து உறுப்பினர் தேர்தலுக்குக் காரணமாக இருக்க
வேண்டும்; ஆட்சி முறையில் கோளாறு நேர்ந்த போது, பெரும்பாலான ஊர்
மன்றங்கள் விரும்பினால்