பக்கம் எண் :

10குறள் காட்டும் காதலர்

மதியும் மடந்தை
முகனும் அறியா

பதியிற் கலங்கிய மீன். (குறள், 1116)

ஆயினும் தனக்கு ஒரு பெரிய வேறுபாடு தோன்றுவதாகச்
சொல்கிறான், "திங்களில் மறு (களங்கம்) உள்ளது; என் காதலியின்
முகத்தில் களங்கம் இல்லை. வட்டமாகாமல் குறையாக இருந்து
படிப்படியாக வளர்ந்து நிறைந்தது திங்கள். என்காதலியின் முகம்
என்றும்குறையாமல் நிறைந்து முழுவட்டமாக இயல்பாக விளங்குவது"
என்கிறாள்.

அறுவாய் நிறைந்த
அவிர்மதிக்குப் போல

மறுஉண்டோ மாதர் முகத்து. (குறள், 1117)

காதலி தன் கண்ணிலேயே இருப்பதாக உணர்கிறான் அவன்.
எந்நேரமும் அவளைப்பற்றிய நினைவே. கற்பனையெல்லாம்
அவளுடைய அழகிய வடிவே; கண்ணைவிட்டு நீங்காதவளாகக் காதலி
வாழ்கிறாள்; அவளே தன் கண்மணியாக இருக்கிறாள். அவ்வாறு
எண்ணியபோது அவனுக்கு ஒரு குறைபட்டது, தன் கண்ணில்
கண்மணி இயற்கையாக அமைந்திருப்பதை நினைத்துக் கொண்டான்.
கண்ணின் பாவை என்று கூறப்படும் ஒன்று இருப்பதை நினைத்தான்.
தன் காதலிக்கு இங்கே நிலையான இடம் வேண்டுமே. இந்தப் பாவை
ஏன் இங்கே இருக்க வேண்டும் என்று எண்ணினான். "என் கண்ணில்
உள்ள பாவையே! நீ போய்விடு, இந்த இடத்தை என் காதலிக்கு
நிலையாகத் தரப் போகிறேன், நீ இங்கே இருப்பதால்; யான் விரும்பும்
காதலிக்கு இடம் இல்லாமற் போகிறது, நீ போய்விடு" என்கிறான்.

கருமணியிற் பாவாய்நீ
போதாய்யாம் வீழும்

திருநுதற்கு இல்லை இடம். (குறள், 1123)