காதலியும் இவனைப் போலவே கற்பனையில் மூழ்கிப் பலவாறு எண்ணுகிறாள்; விளையாட்டுத் தன்மையோடு என்னென்னவோ சொல்கிறாள். காதலன் திரண்ட தோள்களுடன் வன்மையான உடம்பு உடைய அழகன், ஆனாலும் காதலி அதை நம்பவில்லையாம். "அவர் எந்நேரமும் என் கண்ணிலே இருக்கிறார். என் கண்ணை விட்டு நீங்குவதே இல்லை. யான் இமைக்கும் போதும், அந்த இமைகளுக்குள்ளேயே இருக்கிறார். கண்ணை மூடி இமைக்கும்போது அவர்வருந்துவதும் இல்லை. எவ்வளவு நுட்பமான உடல்இருந்தால் அவர் இவ்வாறு என் கண்ணில் தங்கியிருக்க முடியும்" என்று வியந்து எண்ணுகிறாள். கண்ணுள்ளின் போகார்; இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். (குறள், 1126) காதலனையே எந்நேரமும் நினைந்து நினைந்து உருகும் காதலி. தன்னைப் புனைந்துகொள்வதையும் மறந்து விடுகிறாள்; புறக்கணித்துவிடுகிறாள். நினைவு ஒன்றே அவளுடைய வாழ்க்கையாக அமைகிறது, "ஏன் அம்மா உன் கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளாமல் இப்படி வாளா இருக்கிறாய்? அழகுப்படுத்திக் கொள்வதையும் மறந்து விட்டாயே?" என்று சிலர் கேட்கிறார்கள். கேட்டவர்களுக்கு வாய் திறந்து மறுமொழி கூறவும் அவளுக்கு மனம் இல்லை. கேட்டவர்கள் அப்பால் சென்ற பிறகு, காதலி தனக்குள் எண்ணுகிறாள். "நான் ஏன் கண்ணுக்கு மை எழுதவேண்டும்? என் கண்ணில் காதலர் இருக்கும்போது. மை எழுதினால், அந்த மையின் கரு நிறத்தால், அவர் தோன்றாமல் மறைந்தால் |