பக்கம் எண் :

12குறள் காட்டும் காதலர்

என்ன செய்வது? ஆகையால் மை தீட்டமாட்டேன்" என்கிறாள்.

கண்ணுள்ளார் காத
லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து. (குறள், 1127)

உண்ணும் உணவையும் மறந்து சிலைபோல் ஒரு மூலையில் கிடந்து
காதலனையே எண்ணிக்கொண்டிருக்கிறாள். "ஏன் அம்மா இப்படி
உட்கார்ந்திருக்கிறாய்? உணவுக்கு நேரமாயிற்றே. சமைத்த உணவைச்
சூடாகச் சாப்பிட வேண்டாவா? ஆறிப் போனால் சாப்பிட மாட்டாயே,
எழுந்துவா" என்கிறாள் தாய். தலைவியின் மனம் கற்பனையில்
ஆழ்ந்துவிடுகிறது. "என் காதலர் நெஞ்சிலேயே எந்நேரமும்
இருக்கிறார். என் நெஞ்சை விட்டு அவர் செல்வதே இல்லை.
ஆகையால் சூடானவற்றை எப்படி உண்பேன்? சூடான உணவு
உண்டால் அதன் வெப்பம் அவரைத் தாக்கும் என்று
அஞ்சுகின்றேன்" என்கிறாள்.

நெஞ்சத்தார் காத
லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. (குறள், 1128)

இவை காதலரின் குழந்தை மனப்பான்மையைக் காட்டும்
கற்பனைகள்; வாழ்க்கையோடு ஒட்டாத கற்பனைகளே ஆயினும் காதல்
மனத்தின் அருமையான விளையாட்டுகளாக உள்ளன.
திருவள்ளுவரின் காமத்துப்பால் கலைச்சுவை நிரம்பி விளங்குவதற்கு
அவர் படைத்த இத்தகைய கற்பனை காரணம் ஆகும்.