பக்கம் எண் :


மலர் வெட்கத்தால் தலை குணிந்துவிடுமாம், "இந்தக் கண்களின்
அழகுக்கு முன் நாம் எங்கே" என்று வருந்திக் கவிழ்ந்து சாயுமாம்.
உடனே அவனுக்கு மற்றொன்று நினைவுக்கு வருகிறது. கண்களுக்கு
இருக்கும் தனியாற்றல், மற்றவர்களைப் பார்த்து உணரும்
தன்மையாகும். இந்தத் தன்மை குவளை மலருக்கு இல்லை. கண்
போல் தோன்றினாலும், குவளை மலர் ஒருவரையும் பார்க்க முடியாது.
இதுவே அதற்குப் பெரிய குறை என்று எண்ணுகிறான். உடனே
குவளை மலரைப்பழிக்கிறான். "அந்தக் குவளை மலர் என் காதலியின்
கண்களைப் பார்க்கவில்லை. பார்க்கும் ஆற்றல் இல்லை. ஆற்றல்
இருந்து, ஒருமுறை பார்த்தாலும் போதும்.உடனே கண்களின் அழகுக்குத்
தோற்று நாணம் அடைந்து கவிழ்ந்து சாயும்; வெட்கத்தால் நிலத்தை
நோக்கிக் கவிழும்" என்கிறான்.

காணின் குவளை
கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ஒவ்வேம் என்று. (குறள், 1114)

காதலியின் முகம் திங்கள் போல் அழகானது என்று மற்றவர்கள்
பாராட்டுகிறார்கள். வானத்தை நோக்கித் திங்களின் அழகைப்
பார்க்கிறான் காதலன். உண்மைதானோ என்று பார்க்கிறான்,
வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் இங்கும் அங்கும் அலைவன போல்
தோன்றுகின்றன. நேற்று இருந்த இடத்தில் இன்று இல்லை. சற்று முன்
இருந்த இடத்தில் இப்போது இல்லை. இப்படி நிலைகொள்ளாமல் விண்
மீன்கள் அலைவதற்குக் காரணம் என்ன என்று எண்ணுகிறான்.
வானத்தில் உள்ள திங்கள், நிலத்தில் உள்ள காதலியின் முகம் இந்த
இரண்டும் ஒரே தன்மையாகத் தோன்றுவதால், எது திங்கள் எது
வானம் என்று தெரியாமல் அந்த விண்மீன்கள் அலைகின்றனவாம்!