குத் தேவையான உண்மைகளை விளக்கி அறிவுரைகளை எடுத்துரைக்கிறார். காமத்துப்பாலில் அவர் நேராக ஒன்றும் கூறவில்லை. ஒரு நல்ல நாடக மேடை அமைத்து, அதில் காதலன், காதலி, தோழி என்பவர்களை நடிக்கச் செய்கிறார், காமத்துப்பால் முழுதுமே இப்படிக் கற்பனை நாடகமாக அமைந்துள்ளது. திருவள்ளுவர் நேரே நம்மிடம் பேசுவதில்லை. அவர் காதலியாக நடித்துப் பேசுகிறார். காதலனாகப் நடித்துப் பேசுகிறார்;தோழியாக நடித்துப் பேசுகிறார். ஆகையால் கற்பனைக்கு இங்கே மிகுதியாக இடம் இருக்கிறது. காதல் துறை மற்ற வாழ்க்கைத் துறைகளை விட வேறுபட்டது; விளையாட்டு மனப்பான்மை நிறைந்தது. காதலில் உடலுறவும் உண்டு; உள்ளத்து உறவும் உண்டு. உடலுறவைத் துணையாகக் கொண்டு உள்ளத்து உறவை வளர்ப்பது காதல். உடலுறவில் விலங்கின இயல்பு கலந்துள்ளது, உள்ளத்து உறவில் குழந்தையின இயல்பு உள்ளது. குழந்தை கற்பனையை விரும்புவது; வாழ்க்கையையே விளையாட்டாக மாற்ற வல்லது. காதலர் மனத்தில் இது இயல்பாக உள்ளது. திருவள்ளுவர் படைத்து அளிக்கும் காதலர்கள் இத்தகைய கற்பனை விளையாட்டுகள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அழுவதிலும் கற்பனை உள்ளது; மகிழ்வதிலும் கற்பனை உள்ளது. காதலியின் கண்களைப் பார்த்தவர்கள் எல்லோரும் அந்தக் கண்கள் குவளை மலர்களைப் போல் உள்ளது என்று அழகைப் பாராட்டுகிறார்கள். ஆனால் குவளை மலரை விட அழகான கண்கள் என்று காதலன் பாராட்டுகிறான். கண்களின் அழகு குவளை மலரில் இல்லை என்பது அவனுடைய கருத்து. அதனால், மற்றவர்கள் குவளை மலருக்கு ஒப்பாகக் கூறும்போது அவனால் பொறுக்க முடியவில்லை. காதலியின் கண்களின் அழகைக் கண்டால், குவளை |