வருந்துகிறாள், முகில்கள் மின்னுகின்றன; இடித்து முழங்குகின்றன; மழை பெய்கின்றது. "ஏ! மேகங்களே என் கணவர் என்னைப் பிரிந்து தனியே விட்டுச் சென்றுள்ள இந்தத் தனிமை நிலையில் என்னை வருத்துகின்றீர்களே! யான் ஒரு பெண் என்பதையும் நீங்கள் எண்ணவில்லையே. பெண்ணின் மேல் இரக்கம் கொள்ளலாகாதா? இங்கே என்முன் மின்னி இடித்து ஆரவாரம் செய்கின்றீர்களே! அங்கே வெளிநாட்டில் உள்ள அந்த ஆண் மகன் எதிரில் சென்று உங்கள் ஆற்றலைக் காட்டுங்கள், பார்க்கலாம்" என்கிறாள். இது வாழ்க்கையோடு ஒட்டாத கற்பனை; ஆயினும் சுவைபட நயமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் காதலனைப் பிரிந்து வருந்தும் எந்த நங்கையும் இப்படி முகில்களை நோக்கிப் பேசுவதில்லை; முகில்களின் மேல் குறை கூறுவதில்லை. இவ்வாறு வாழ்க்கையோடு ஒட்டாத கற்பனையே என்றாலும், கலையுலகம் இதை ஏற்றுப்போற்றுகிறது; கற்பவர் மனம் இந்த விருந்தை நுகர்ந்து மகிழ்கிறது. பஞ்சதந்திரக் கதைகளிலும், ஈசாப் எழுதிய கதைகளிலும், விக்கிரமாதித்தன் கதைகளிலும் குரங்கு, நரி, கிளி முதலியவை பேசுகின்றன, வாழ்க்கையோடு ஒட்டாதவைகளாயினும் இந்தக் கதைகள் சுவை மிகுந்தவை களாக உள்ளன. திருவள்ளுவர் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் கற்பனைகளைத் தேடவில்லை. ஒரு சில இடங்களில் கற்பனைகள் இயற்கையாக வந்து அமைந்துள்ளன. காமத்துப்பாலில் கற்பனைகளைத் தேடி அமைக்கிறார். அறத்துப்பாலில் தனி வாழ்க்கையில் உயர்ந்த நெறியில் நடப்பதற்கு வழி காட்டும் குருவாக விளங்கி அறவுரைகளைக் கூறுகிறார் திருவள்ளுவர். பொருட்பாலில் சிறந்த அறிஞராய் நின்று பொது வாழ்க்கைக் |