பக்கம் எண் :

6குறள் காட்டும் காதலர்

என்றும் கூறுவார்கள். நல்ல உடல் நலம் உடையவர்களுக்கும்
இப்படிப்பட்ட கனவுகள் சிற்சில நாட்களில் வருவது உண்டு.

கற்பனைகள் கனவு போன்றவைகளே. கனவு நம்மை மீறி
இயற்கையாக நிகழ்பவை. கற்பனை, நாமே விரும்பி மேற்கொள்பவை.
இதுதான் பெரிய வேறுபாடு. கனவு என்பது உறங்கும் மூளையின்
கற்பனை என்றும், கற்பனை என்பது விழித்த மூளையின் கனவு
என்றும் கூறலாம்.கனவுலகத்தில் கனவு நடைபெறும் வரையில் நமக்கு
உரிமை இல்லை; நடப்பது நடந்தே தீரும். கற்பனை உலகத்தில் நமக்கு
முழு உரிமை உண்டு, நாம் விரும்பியபோது விரும்பியவாறு அந்தக்
கற்பனை உலகத்தை மாற்றியமைக்கவோ, நிறுத்தி விடவோ நம்மால்
முடியும்.

இந்த வேறுபாடு தவிர, பொதுவாகப் பார்த்தால் கற்பனை
கனவுபோலவே அமைவதை உணரலாம், கனவில் இருவகை இருப்பதை
உணரலாம்.

கற்பனைகளில் வாழ்க்கையோடு ஒட்டியவைகளும் உண்டு;
வாழ்க்கையோடு ஒட்டாதவைகளும் சில உண்டு.

கார் காலத்து மழையைப் பெற்றதும் முல்லைக் கொடிகளில்
அரும்புகள் தோன்றுகின்றன. அந்த அரும்புகள் சிரிக்கின்ற
பற்களைப்போல் காட்சியளிக்கின்றன. கார்காலம் வந்த பிறகும் என்
கணவர் வரவில்லையே என்று ஏங்கும் ஒரு மங்கை அவற்றைப்
பார்க்கின்றாள்; அந்த முல்லையரும்புகள் தன் துயரத்தையும்
கலக்கத்தையும் அறிந்து எள்ளிச் சிரிக்கும் பற்களாக அவளுக்குத்
தோன்றுகின்றன, இது கற்பனை; ஆனால் வாழ்க்கையோடு ஒட்டிய
கற்பனை.

கார்காலம் வந்துவிட்டது, வானத்தில் கருநிறமாய்த் திரண்டுவரும்
முகில்களைப் பார்க்கின்றாள் அந்த நங்கை;