2. காதலர் கற்பனை
நாம் காணும் கனவுகளை இருவகையாகக் கூறலாம். ஒரு வகைக் கனவுகள் வாழ்க்கையை ஒட்டியனவாகவே இருக்கின்றன, வாழ்க்கையில் உள்ள பாம்பு, எலி, திருடன், பணம், திருவிழா, நண்பர், உற்றார், இன்ப நிகழ்ச்சிகள், துன்ப நிகழ்ச்சிகள் முதலிய பலவற்றையும் கனவில் காண்கிறோம்; வாழ்க்கையில நடப்பது போலவே இந்தக் கனவுகளிலும் நடக்கிறோம்; வாழ்க்கையில் பேசுவது போலவே பேசுகிறோம். வாழ்க்கையில் இன்ப துன்பங்களை நுகர்வது போலவே நுகர்கிறோம். இந்தக் கனவுகள் வாழ்க்கையோடு ஒட்டிய கனவுகள்.
மற்றொரு வகைக் கனவுகளில் ஓடும் பாம்பு நிற்கும் மரமாகிவிடும், பசுவாய்க் காண்போம்; அது மனிதனாகி விடும். வெறுங்கற் குவியலாக இருக்கும்; பணக்குவியலாக மாறும். முன் நோக்கி நடந்தால் பின்னுக்குச் சென்று விடுவோம். அடியெடுத்து வைத்து நடந்தால் பறப்பதுபோல் .வானத்தில் எழுந்து எங்கோ மேலே செல்வோம். தொப்பென்று விழுவோம்; மறுபடியும் பறப்போம். நம் வாழ்க்கையில் நடக்காதவை எல்லாம் இந்த வகையான கனவுகளில் நிகழும். இவை வாழ்க்கையோடு ஒட்டாத கனவுகள், இந்தக் கனவுகள், உடல் நலம் இல்லாத நோயாளிகளுக்கு நேரும் என்று கூறுவார்கள்; மூளை நரம்புகளின் மெலிவாலும் சீர்கேட்டாலும் இவை ஏற்படுதல் உண்டு |