பக்கம் எண் :

14குறள் காட்டும் காதலர்

எண்ணுகிறான். அடுத்தாற் போலவே, அவனுடைய பழைய
வாழ்க்கை-காதலுக்கு முன் வாழ்ந்த நல்ல வாழ்க்கை - நினைவுக்கு
வருகின்றது.

நான்கு பேர்-ஊரார்-பழிக்கும்படியான நிலைமையை அடைந்து
சாவது என் வாழ்க்கை ஆய்விட்டதே. இப்படி நாணம் இழந்து
சாகவேண்டுமா? நான் இதுவரையில் எப்படி வாழ்ந்தேன்!
செய்யத்தகாதவற்றை எப்போதுமே செய்ததில்லை. அத்தகைய நாணம்
என் வாழ்க்கையில் இருந்தது. இன்று பிறர் பழிக்கும் நிலைமை
அடைகின்றேன். என் நாணம் என்ன ஆயிற்று! என்
வீரம்-ஆண்மை-எல்லோராலும் போற்றப்பட்டு வந்தது. இப்போது
இவ்வாறு ஒரு பெண்ணுக்காகச் சாகும் நிலைமை வருகிறது.
என்னுடைய நாணமும் இந்த நல்ல ஆண்மையும் பழங்கதை
ஆகிவிட்டன. முன் ஒரு காலத்தில் இவை எனக்கு இருந்தன என்று
சொல்லும் நிலைமை வந்து விட்டது. இன்று இருப்பது இது தான்;
இந்த மடல் ஏறும் நிலைமை தான்" என்கிறான்.

நாணொடு நல்லாண்மை
பண்டு உடையேன் இன்று உடையேன்

காமுற்றார் ஏறும் மடல். (குறள், 1133)

நாணமும்நல்லாண்மையும் அவனிடம் நேற்று வரையில் இருந்தன;
தக்க பண்பு உடையவன், நல்ல வீரன் என்று நேற்று வரையில் ஊரார்
புகழும் நிலைமையில் இருந்தான். இன்று தன் நிலைமையை எண்ணிப்
பார்க்கும்போது அவை தன்னைவிட்டு நீங்குவதை உணர்கிறான். கரை
கடப்பதற்கு உதவி வந்த தெப்பமே இப்போது வெள்ளத்தில்
அகப்பட்டுக் கைக்கு எட்டாமல் விரைந்து புரண்டு ஓடுவது போல்
அவை அவனைவிட்டு நீங்குவதை உணர்கிறான். காதல் பெரிய
வெள்ளம்; மிகவேகமாகக் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். அந்த
வெள்ளத்தில் நாணமும் நல்லாண்மையும் அகப்பட்டுக்