பக்கம் எண் :

3. ஊசலாட்டம்15

கொண்டன; வெள்ளம் அவற்றை வேகமாக அடித்துச் செல்கின்றது,
அவனால் அவற்றை மீட்க முடியவில்லை. "இது வரையில் என்
வாழ்க்கையை நான் நன்றாக நடத்துவதற்குத் தெப்பம்போல் எனக்கு
உதவியாக இருந்தவை இந்த நாணமும் ஆண்மையும். இன்று இந்தத்
தெப்பமே எனக்கு எட்டாமல் காதல் வெள்ளத்தில் அகப்பட்டு
அடித்துச் செல்லப்படுவதை உணர்கிறேன். எனக்கு இனி வாழ்வு ஏது?"
என வருந்துகிறான்.

காமக் கடும்புனல்
உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. (குறள், 1134)

அவளை விட்டு இனி வாழ்வு இல்லை என்னும் அளவிற்கு அவன்
தன் உள்ளத்தில் காதல் வளர்த்திருந்தான். அதுவே இன்று உயிர்
வாழ்வை வெறுக்கும் எல்லைக்குக் கொண்டு செல்கின்றது. அவள்மேல்
கொண்டிருந்த பேரன்பு, இன்று தற்கொலையை வரவேற்கும்
பெருந்துணிவாக முடிந்துள்ளது. "உடம்பும் உயிரும் எப்படியோ
யானும் இவளும் அப்படி" என்றும் "உயிர்க்கு வாழ்வு
எத்தன்மையானதோ, அத்தன்மையானவள் எனக்கு இவள்;
உயிர்க்குச்சாவு எப்படியோ, அப்படிப்பட்டது இவளை விட்டுப்பிரிவது"
என்று காதல் கொண்டபோது உணர்ந்தவன் இவன்.

உடம்பொடு உயிரிடை
என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு (குறள், 1122)

வாழ்தல் உயிர்க்கு அன்னள்
ஆயிழை சாதல்
அதற்குஅன்னள் நீங்கு மிடத்து. (குறள், 1124)