பக்கம் எண் :

16குறள் காட்டும் காதலர்

மனம் ஊசல் போன்றது. தெற்கே எந்த அளவிற்குச் செல்கின்றதோ,
அந்த அளவிற்கு வடக்கிலும் சென்று ஆடியே தீரும். அதுவே
ஊசலின் இயற்கை. ஒரு பொருள்மேல் மிகுதியான விருப்பம் வைத்து
மகிழ்ச்சி கொண்டால் அந்தப் பொருளைவிட்டுப் பிரியும்போது
இவ்வளவு மிகுதியான வருத்தமும் ஏற்பட்டே தீரும். மருத்துவருக்குத்
தன் குழந்தையிடம் பற்று மிகுதி; அதனால் தன் குழந்தை நோயால்
வாடும் போது அவருடைய மனம் மிகுதியாக வருந்துகிறது. அதே
மருத்துவரிடம் எத்தனையோ குழத்தைகள் நோய்க்கு மருந்து நாடி
வருகின்றன. அந்த குழந்தைகளின் மேல் அவர்க்குப் பேரன்பும்
இல்லை; பற்றும் இல்லை. அதனால் அந்தக் குழந்தைகள் நோயால்
துடிக்கும்போது, அவருடைய மனம் துடிப்பதில்லை. அவைகளின்
நோயைப் பார்த்து மருந்து கொடுத்தலை ஒரு கடமையாகச்
செய்துவிட்டுக் கவலை இல்லாமல் காலம் கழிக்கிறார்,

காதலன், "முன்னெல்லாம் நாணமும் நல்லாண்மையும் உடையவனாக
இருந்தேனே" என்று வருந்துகிறான். இது உண்மைதான்.
முன்னெல்லாம் அவனுடைய மனம் கவலை இல்லாமல் இருந்தது.
நாணமும் நல்லாண்மையும் உடையவனாக, அவன் எந்தப்
பெண்ணிடமும் பற்றுக் கொள்ளாமல், கடமையைச் செய்து வந்தான்.
அதனால் இதற்கு முன் வருந்த வேண்டிய நிலைமையும் இல்லை;
பிறர்பழிக்கு ஆளாகும் நெருக்கடியும் ஏற்படவில்லை. ஆனால்
இப்போது சில நாட்களாக அவன் கொண்ட காதலால், அவனுடைய
மனம் ஒரு பெண்ணிடம் தீராத பற்றுக்கொண்டு விட்டது. உயிர்க்கும்
உடம்புக்கும் உள்ளது போன்ற பற்று ஏற்பட்டு விட்டது. அதனால்
அவளுடன் வாழ்தலையே உயிருடன் வாழ்வதாகவும், அவளைப்
பிரிந்து வாழ்தலையே சாவாகவும் உணர்கின்றான். காதல் நிறைவேற
இடம் இல்லை என்று அறிந்ததும் அவனுடைய மனம் வாழ்வை
வெறுத்துச் சாவை வரவேற்கின்றது.