"தற்கொலை முயற்சியொடு மாலைபொழுதில் வருந்தும் துயரத்தையே என் காதலி எனக்குத் தந்தாள்" என்கிறான். தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். (குறள், 1135) காதலில் நம்பிக்கை இருந்தபோது, "இவளை அடிக்கடி நினைக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. மறந்தால்தானே நினைக்க முடியும்?" என்று முன்பு கூறித் தன் காதலைப்பற்றிப் பெருமைப்பட்டான்; மகிழ்ச்சியுற்றான். இன்று காதலில் நம்பிக்கை அகன்றதும், "அவளுக்காக என் கண்கள் உறங்குதலும் போயிற்று, எல்லோரும் உறங்கும் நள்ளிரவிலும் யான் தற்கொலை முயற்சியைப் பற்றியே இடை விடாமல் நினைக்கவேண்டியுள்ளது" என்று கலங்குகிறான்; துயருறுகிறான். உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.(குறள், 1125) இது பழைய மனத்தின் மகிழ்ச்சியான நிலை. மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற; படல்ஒல்லா பேதைக்குஎன் கண். (குறள், 1316) இது இன்றைய மனத்தின் துயர நிலை. அன்று நம்பிக்கை இருந்தது; அந்தக் காதல் மகிழ்ச்சி அளித்தது. இன்று நம்பிக்கை இல்லை; அந்தக் காதலே துயரம் தருகிறது. அன்று தெற்கே அந்த எல்லைக்குச் சென்று களித்த அதே மனம், இன்று வடக்கே இந்த எல்லைக்குச் சென்று கலங்குகிறது. மனம் ஊசல்; காதலிலும் ஊசலின் இருபுற ஆட்டம் உள்ளது. |