உள்ளத்தை அவளிடம் பறிகொடுத்த அந்நிலையில் என்ன எண்ணுகிறான்? "பகைவர்களும் அஞ்சத்தக்க வீரம் எனக்குப் பெருமையாக இருந்தது, அந்தப் பெருமை இந்தப் பெண்ணின் அழகின் முன்னே தோற்று ஒதுங்கிவிட்டதே!" என்று எண்ணுகிறான். ஒண்ணுதற்கு ஓஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. (குறள், 1088) அவ்வாறு தன் வீரம் உடைந்துவிடும் அளவிற்குத் தன் மனம் காதலியிடம் ஈடுபடுவது உணர்கிறான், ஆயினும் அவளைத் திரும்பத் திரும்பக் காண விரும்புகிறான், காரணம் என்ன? அவள் காணும் போது தன்னைக் கொடுமையாக வருத்துவது போன்ற ஒரு வகைத் துன்ப உணர்ச்சி உற்ற போதிலும், அவளைக் காண்பதிலே ஒருவகை மகிழ்ச்சியும் பெறுகிறான், "நோக்கிய அவளுடைய பார்வைக்கு எதிரே பார்த்தல், வருத்தும் அணங்கு (மோகினி) ஒரு சேனையோடு வந்து தாக்குவதுபோல் உள்ளது." நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. (குறள், 1082) "கூற்று (யமன்) என்பதை இதற்குமுன் அறியேன். இப்போது அறிந்தேன். அது பெண்ணின் பெரிய கண்களில் உள்ளது." பண்டுஅறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு. (குறள், 1083) இவ்வாறு தன்னை வருத்தும் பார்வை அந்தக் காதலியிடம் இருப்பினும், அவளைக் காண்பதில் ஒருவகை மகிழ்ச்சி பிறப்ப |