தையும் உணர்கிறான், "மயக்கம் தரவல்ல கள்ளும் பார்த்தால் மயக்கம் தராது; உண்டால் தான் மயக்கம் தரும். ஆனால் இந்தக் காதல் பார்த்தவர்களுக்கு மயக்கமும் மகிழ்ச்சியும் தருவதாக உள்ளதே" என்று வியக்கிறான். உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. (குறள், 1090) உடனே தன்கருத்தை மாற்றிக்கொள்கிறான். "இவர்களுடைய கண்கள் முற்றிலும் கொடியவை அல்ல; இவளுடைய பார்வையில் இருவகை உள்ளன. ஒருவகைப் பார்வை துன்பம் தருகிறது. மற்றொரு பார்வை அத்துன்பத்திற்கே மருந்தாக உள்ளது" என்று உணர்கிறான். இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து. (குறள், 1091) இந்த இன்ப துன்பப் போராட்டம் தனக்கு மட்டும் தானா என்று எண்ணுகிறான். காதலியைப் பார்க்கிறான். அவளும் தன்னை நோக்குகிறாள்; பிறகு உடனே தன் பார்வையை மாற்றித் தரையை நோக்குகிறாள்; மெல்ல நகைக்கிறாள், "யான் நோக்கும் போது தான் நிலத்தை நோக்குகிறாள், யான் அவளை நோக்காதபோது, அவள் என்னை நோக்கி மெல்லச் சிரிக்கிறாள்"என்கிறான். அவள் மனமும் தன் மனம் போலவே காதல்வயப்பட்டு உணர்வதைத் தெளிகிறான்: நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர்.(குறள், 1093) |