பக்கம் எண் :

20குறள் காட்டும் காதலர்

முன்னேற்றத்தால் வாழ்க்கை எவ்வளவோ மாறிய பிறகும்
ஆண்களைப் போலவே பெண்கள் எல்லாத் தொழில்களுக்கும்
தகுதிபெற்று எவ்வளவோ முன்னேறிய பிறகும், முன்னோர்களின்
அமைப்பு மிகப் பொருத்தமானது என்றே தோன்றுகிறது.

திருவள்ளுவர் அந்தக் காலத்து வாழ்க்கையை நன்கு ஆராய்ந்தவர்;
அதன் வாயிலாக மனிதரின் அடிப்படை பண்புகள் இன்னவை என்று
தெளிந்தவர். அவர் இயற்றிய அரிய நூலில் இத்தகைய குறிப்புகளை
ஆங்காங்கே அமைத்துள்ளார். காமத்துப் பாலில் இந்தக் கருத்தோடு
சிலவற்றைக் குறித்துள்ளார்.

காதலி தன் கண்ணிலேயே காதலன் இருப்பதாகவும், அதனால்
கண்ணுக்கு மை எழுதத் தயங்குவதாகவும் கூறுகின்றாள்.

காதலனும் அவ்வாறே அவளைத் தன் கண்மணியாகப்
போற்றுகிறான். கண்ணில் உள்ள பாவையைப் பார்த்து, "என்
கண்மணியில் உள்ள பாவையே! நீ போ. யான் விரும்பும் காதலிக்கு
அங்கு இடம் வேண்டும். நீ இருந்தால் அவளுக்கு இடம் இல்லாமற்
போகிறது! என்கிறான்.

கண்ணுள்ளார் காத
லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து (குறள், 1127)

என்பது அவள் கூறுவது.

கருமணியிற் பாவாய்நீ
போதாய் யாம்வீழும்

திருநுதற்கு இல்லை இடம். (குறள், 1123)