என்பது அவன் கூறுவது, இவற்றில் இருவர் நெஞ்சமும் ஒரே தன்மையாக உணர்வதைக் காணலாம். காதலர் தன் நெஞ்சில் இருப்பதால்தான் வெப்பமான உணவை உண்ண அஞ்சுவதாகக் காதலி கூறுகிறாள். காதலனும் அவளைத் தன் நெஞ்சிலேயே வைத்து மறவாமல் இருப்பதாகக் கூறுகிறான். அவளை யான் நினைப்பதே இல்லை, மறந்தால், பிறகு நினைப்பேன். ஆனால் அவளுடைய பண்புகளை யான் மறந்ததே இல்லையே, எப்படி நினைக்க முடியும்" என்கிறான். நெஞ்சத்தார் காத லவராக வெய்து உண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. (குறள், 1128) இது அவள் கூறுவது. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (குறள், 1125) இது அவன் கூறுவது. இவற்றிலும் இருவர் உள்ளமும் ஒரே வகையாக உணர்வது காணலாம். இவ்வாறு காதல் நெஞ்சை ஒரே தன்மையாக விளக்கும் திருவள்ளுவர், பெண்மையும் ஆண்மையும் வேறுபட்டு நிற்கும் இடங்களையும் குறிக்கின்றார், அவற்றுள் ஒன்று வருமாறு:- காதலன் மடல் ஏறுவதாக (தன்னைத் தான் வருத்தி அழித்துக் கொள்வதாகத்) துணிகிறான். காதலால் துன்புற்று வருந்தினவர்க்கு மடல் தவிர வேறு வழி இல்லை என்கிறான். காதலியின் பிரிவுத் துயரத்தைப் பொறுக்க முடியாமல் தன் உடம்பும் உயிரும் மடலேறத் துணிகின்றன என்கிறான். |