மடலேறுவதை இரவெல்லாம் எண்ணி எண்ணி உறக்கமும் நீங்கி விட்டது என்கிறான். காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல்அல்லது இல்லை வலி (குறள், 1131) நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணினை நீக்கி நிறுத்தி, (குறள், 1132) மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண், (குறள், 1136) இவ்வாறு தன் துயரை நினைந்து வருந்தும் காதலன், காதலியும் இவ்வாறு துயருறுவாளோ என எண்ணிப் பார்க்கிறான். உடனே அவனுக்கு உலக வழக்கம் நினைவுக்கு வருகிறது, காதலால் வருந்திய பெண்கள் மடல் ஏறுவதாக அவன் கேள்வியுற்றதே இல்லை, பெண்கள் எவ்வாறோ தம் உள்ளத்தே பிரிவுத் துயரைப் பொறுத்துத் தாங்கிக் கொள்வதை எண்ணி வியந்தான். "கடல் போன்ற காதலால் வருந்தியும், மடல் ஏறாத பெண்ணின் பண்பு பெரியது. அதை விடப் பெரியது இல்லை" என்று வியப்புறுகிறான். கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் (குறள், 1137) இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பண்பு வேறுபாடு விளங்குகிறது. துன்பத்தைத் தன் நெஞ்சின் அளவில் நிறுத்தித் தானே தனித்து வருந்தும் ஆற்றல் பெண்மைக்கு உண்டு, ஆணுக்கு அந்த ஆற்றல் அவ்வளவாக இல்லை. அதனால் |